14 சதவீத வாக்குகளை இழந்தது அதிமுக: திமுகவுக்கு 28 சதவீத வாக்குகள் அதிகரிப்பு

சென்னை: கடந்த மக்களவை தேர்தலைவிட இந்த தேர்தலில் திமுகவுக்கு 28 சதவீத வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரத்தில் அதிமுகவின் வாக்கு 14 சதவீதம் சரிந்துள்ளது. இது ஆளும்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 4 அணிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக தனித்து 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது. திமுக 34 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்தக் கூட்டணியில் விசிக 2 தொகுதியிலும், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது. பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தனி அணியாக போட்டியிட்டன. காங்கிரஸ் 39 தொகுதியிலும் தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் அதிமுக 37 தொகுதியிலும், பாமக, பாஜ தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. அதில் அதிமுக 44.34 சதவீத வாக்குகளை பெற்றது. திமுக சராசரியாக 24 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அதிமுக கூட்டணியில், பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சிகள் தனித்து போட்டியிட்டன.அதில் திமுக சராசரியாக 52.65 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன. கடந்த தேர்தலை விட திமுக சராசரியாக 28 சதவீத வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளன. அதேபோல, அதிமுக கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் 14 சதவீத வாக்குகளை குறைவாக பெற்றுள்ளனர். அதிமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன் வெறும் 5.19 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளார். அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் சேர்ந்தால் கூட மொத்தமாக திமுக பெற்ற வாக்குகளை விட மிக குறைவுதான். இதனால் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக முழுமையாக கரைந்து வருகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

× RELATED ஜூன் 28ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக...