பாமக, புதிய தமிழகம் கட்சிகளால் 9 இடங்களை பிடித்த அதிமுக

சென்னை: பாமக, புதிய தமிழகம் கட்சிகளால்தான் அதிமுக 8 இடங்களை பிடித்துள்ளது. தனது செல்வாக்கால் ஒரு தொகுதியைத்தான் அதிமுகவால் பிடிக்க முடிந்தது. இதனால் அக்கட்சி தனது சொந்த செல்வாக்கை இழந்து வருவது அம்பலமாகியுள்ளது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் ஒரு அணியாகவும், டிடிவி தினகரன் ஒரு அணியாகவும் பிரிந்தனர். தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களை வென்றது. அதிமுக மட்டும் தேனி தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேநேரத்தில் 22 சட்டப்பேரவைக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக 13 இடங்களையும் அதிமுக 9 இடங்களையும் கைப்பற்றியது. அதில் பாமக செல்வாக்காக இருக்கும் வடக்கு மாவட்டங்களில் உள்ள சோளிங்கர், அரூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய இடங்களில் அதிமுக வென்றுள்ளது. வடக்கு மாவட்டங்களில் பாமக ஓட்டுக்கள் அனைத்தும் அதிமுகவுக்கு விழுந்துள்ளன. ஆனால் அதிமுக ஓட்டுக்கள் பாமகவுக்கு விழவில்லை.

அதேபோல புதிய தமிழகம் செல்வாக்காக உள்ள நிலக்கோட்டை, பரமக்குடி, விளாத்திகுளம், சாத்தூர், மானாமதுரை ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தென் மாவட்டங்களில்தான் அதிமுக செல்வாக்காக இருந்து வந்தது. தற்போது தென் மாவட்டங்களில் அமமுகவுக்குத்தான் செல்வாக்கு அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. அதிமுகவை ஆதரித்து வந்த ஒரு குறிப்பிட்ட சமுதாய வாக்குகள் அனைத்தும் இந்த முறை அமமுகவுக்குச் சென்றன. இதனால் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக புதிய தமிழகத்தை அதிமுக கூட்டணியில் சேர்த்தது. அதோடு, தேவேந்திரர்களின் பட்டியல் வெளியேற்றம், ஒரே பெயரில் அழைப்பது போன்ற வாக்குறுதிகளை பிரதமர் மோடி மதுரை, பொதுக் கூட்டத்தில் அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், தேவேந்திரர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இதே பிரசாரத்தை மேற்கொண்டார். இதனால், அந்த சமுதாய வாக்குகள் இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு கிடைத்தன. இதனால்தான் செல்வாக்கு இல்லாத இந்த 8 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், சூலூர் தொகுதியில் சமீபத்தில்தான் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், மரணமடைந்தார். இதனால் அவரது அனுதாபம் மற்றும் அதிமுகவினர் பணத்தை பெருமளவில் வாரி இறைத்து செலவு செய்தனர். இதனால்தான் அதிமுக சூலூரில் வென்றது. தென் மாவட்டங்களில் பொய்யான வாக்குறுதிகளை அளித்ததாலும், வட மாவட்டங்களில் பாமகவின் வாக்குகளாலும்தான் அதிமுக 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இல்லாவிட்டால் இந்த தொகுதிகளில் படுதோல்வியை சந்தித்து, ஆட்சியை இழந்திருக்கும் என்று தற்போது தெரியவந்துள்ளது.

Related Stories: