வெற்றி பெற்ற அனைத்து எம்பிக்களுடன் சென்று அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து எம்பிக்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி போட்டியிட்ட 38 தொகுதியில் 37 தொகுதியில் மகத்தான வெற்றியை பெற்றது. இதில் திமுக 19 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் அனைவரும் அண்ணா அறிவாலயம் வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காட்டி வாழ்த்து பெற்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வெற்றி பெற்ற அனைத்து எம்பிக்களும் நேற்று காலை உழைப்பாளர் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்பி, தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, மத்திய சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் தயாநிதிமாறன், வட சென்னை தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தென் சென்னை தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட அனைத்து எம்பிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் திமுக பொது செயலாளர் அன்பழகனை சந்தித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

Related Stories: