×

அரசின் அலட்சியத்தால் கிடப்பில் கிடக்கும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள்

சென்னை: அரசின் அலட்சியத்தால் 7 ஆண்டுகள் ஆகியும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.  இந்நிலையில் இந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை குடிநீர் வாரியம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சில உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 74.38 லட்சம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு வரையில் இந்த பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டுவந்தது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரியான அளவில் பெய்யாத காரணத்தால் 1.1.2019 முதல் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதற்கிடையில் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் எரிகள் அனைத்து நீர் இல்லாமல் வற்றிவிட்ட காரணத்தால் குடிநீர் விநியோகம் 500 லிட்டராக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பொது மக்கள் குடிநீர் வாரிய லாரிகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலையே உள்ளது.சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்போது எல்லாம் சென்னை குடிநீர் தேவையை ஓரளவு  பூர்த்தி செய்வதில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் முக்கிய பங்குவகிக்கிறது.

தற்போது விநியோகம் செய்யப்பட்டு வரும் 500 மில்லியன் லிட்டர் குடிநீரில் 180 மில்லியன் லிட்டர் குடிநீர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் கிடைக்கிறது.அதன்படி மீஞ்சூரில் உள்ள நிலையத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. இதன் மூலம் வட சென்னையில் உள்ள மணலி, மாதவரம், கத்திவாக்கம், திருவொற்றியூர், தண்டையார் பேட்டை, வியாசர் படி பகுதிகளில் உள்ள 12 லட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர்.இதனைத் தவிர்த்து நெம்மேலியில் 90 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட நிலையம் செயல்பட்டுவருகிறது. இதன் மூலம் தென் சென்னை பகுதிகளில், சோழிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, பள்ளிப்பட்டு, அடையாறு, பெசன்ட் நகர், நந்தனம், எம்.ஆர்.சி. நகர், இராஜா அண்ணாமலைபுரம் மற்றும் மயிலாப்பூர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னை குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு போரூரில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் நிலையம் மற்றும் நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் 2வது நிலையம் அமைக்கப்படும் என்றும் 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த திட்டம் தொடர்பான பணிகள் தொடங்கப்படவில்லை.

₹1259.38 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தடவுள்ள நெம்மேலி திட்டத்திற்கு அமரூத் திட்டம் மற்றும் ஜெர்மனி நிதி நிறுவனத்திடமிருந்து நிதி உதவிபெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக கடந்த ஆண்டு சர்வதேச டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் முறையாக ஒதுக்கீடு செய்யப்படவில்லை ஒரு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது வழக்கு முடிந்தவிட்ட காரணத்தால் நிதிஅளிக்க ஜெர்மனி நிதி நிறுவனத்திற்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ₹6078 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தபடவுள்ள போரூர் திட்டத்திற்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவு அளிக்கவுள்ளது. மீதம் உள்ள ₹1810 கோடியை தமிழக அரசு வழங்கும். அதன்படி ஜப்பான் கூட்டுறவு முகமை முதல் தவணையாக ₹1744 கோடி நிதி உதவு அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகளும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : By the government's negligence, Sea water, drinking water, plans
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...