×

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பு ராகுலின் ராஜினாமா முடிவை நிராகரித்தது காங். செயற்குழு: கட்சியை வழி நடத்த வேண்டுகோள்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் அறிவித்ததை, காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்தது. தொடர்ந்து கட்சியை வழி நடத்தும்படி வேண்டுகோளும்  விடுத்தது.
 நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ 303 இடங்களை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பா.ஜ தலைமையிலான தே.ஜ கூட்டணி மொத்தம் 352 இடங்களை அள்ளியது. ஆனால், காங்கிரஸ் தனித்து 52 இடங்களையும்,  கூட்டணியுடன் 91 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

பல வியூகங்கள் அமைத்தும் தேர்தலில் தோல்வியை சந்தித்தது ஏன் என ஆராய காங்கிரஸ் செயற்குழு டெல்லியில் நேற்று கூடியது.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இக்கூட்டம் நடந்தது. ஐமு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உ.பி கிழக்கு பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள்,  நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால்,  இந்த தேர்தலில் 52 இடங்களில் வெற்றி பெற்றது. 18 மாநிலங்கள்  மற்றும்  யூனியன் பிரதேசங்களில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அது  பற்றியும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்களை கவராதது ஏன்? வியூகங்கள்  தோல்வி அடைந்தது ஏன்? என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் பற்றி  இந்த  கூட்டத்தில் 4 மணி நேரம் ஆலோசிக்கப்பட்டது.  

இந்த கூட்டத்தில் ராகுல் பேசும்போது, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால், இதை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்த  சிக்கலான நேரத்தில் கட்சியை ராகுல் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர், ஒடிசா காங்கிரஸ் தலைவ் நிரஞ்சன் பட்நாயக் ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தை ராகுலுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், இது பற்றி எந்த முடிவும்  எடுக்கப்படவில்லை.

கட்சியை மாற்றியமைக்க ராகுலுக்கு முழு அதிகாரம்
காங்கிரசின் தேர்தல் தோல்விக்கு கட்சி நிர்வாகிகளின் மந்தமான செயல்பாடும் காரணம் என கூறப்படுகிறது. இதனால், கட்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், தொண்டர்களை ஊக்கப்படுத்தவும் கட்சியை அனைத்து மட்டத்திலும் மாற்றி அமைக்க  திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முழு அதிகாரம் செயற்குழு கூட்டத்தில் ராகுலுக்கு வழங்கப்பட்டது.இந்த சிக்கலான நேரத்தில் கட்சியை ராகுல் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டது




Tags : Kang ,Rahul ,resignation ,defeat ,Party ,Executive , Responsible , electoral defeat, , Executive Committee, Request , lead ,party
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...