வெற்றிபெற்ற எம்பி, எம்எல்ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் ஆந்திர சட்டப்பேரவை தலைவராக ஜெகன் மோகன் ஏகமனதாக தேர்வு

* கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

* பதவியேற்பு விழாவுக்கு அழைக்க மோடியை சந்திக்க திட்டம்

திருமலை: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க  உள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 151 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திராவில் புதிய ஆட்சி அமைய உள்ளது.  வரும் 30ம் தேதி விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மாநகராட்சி மைதானத்தில் பகல் 11.43 மணி முதல் 12 மணிக்குள் புதிய முதல்வராக ஜெகன்மோகன்ரெட்டி பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை முதன்மை செயலாளர்  எல்.வி.சுப்பிரமணியம் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் செய்து வருகின்றனர்.இந்நிலையில் கிருஷ்ணா மாவட்டம் தாடேபல்லியில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் இல்லத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 151 எம்எல்ஏக்கள், 22 எம்பிக்கள் மற்றும் எம்எல்சிக்களுடன் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று  ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில், புதிதாக தேர்வான எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக ஜெகன்மோகன் ரெட்டியை ஏகமனதாக தேர்வு செய்தனர். இதுதவிர 22 எம்பிக்கள் வெற்றி  பெற்றுள்ளதால், மக்களவையில் 22 எம்பிக்களுடன் நாட்டில் அதிக எம்பிக்கள் கொண்ட 4வது கட்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உருவாகியுள்ளது. இதனால் எம்பிக்களில் ஒருவரை கொறடாவாக தேர்வு செய்வது தொடர்பாகவும், மாநில  உரிமைகளை பெறும் விதமாக அனைவரும் மக்களவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.தொடர்ந்து அனைத்து எம்எல்ஏக்களுடன் ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகைக்கு  சென்று கவர்னர் நரசிம்மனை நேரில் சந்தித்து 151 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பின்னர், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவை மரியாதை நிமித்தமாக ஜெகன்மோகன்ரெட்டி சந்தித்தார். மேலும், ஜெகன்மோகன்ரெட்டி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி அழைப்பு  விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் இன்று டெல்லி செல்ல உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: