×

25 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிமில் ஆட்சி மாற்றம்

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் 25 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்த சிக்கிம் ஜனநாயக முன்னணியை, இத்தேர்தலில் எதிர்க்கட்சியான சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா வீழ்த்தி ஆட்சியை பிடித்துள்ளது. சிக்கிமில் மக்களவைத் தேர்தலுடன் 32 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடந்தது. இங்கு, பவன்குமார் சாம்லிங் தலைமையிலான ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கும், சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சிக்கும் இடையே கடும்  போட்டி நிலவியது. இதில், சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா பெரும்பான்மைக்கு தேவையான 17 இடங்களில் வென்றுள்ளது. ஆளும் கட்சி 15 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதன் மூலம், கடந்த 1994ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வரும்  பவன்குமார் சாம்லிங்கின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா எம்எல்ஏ.க்கள் அதன் தலைவர் கோலே தலைமையில் ஆளுநர் கங்கா பிரசாத்தை நேற்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இருப்பினும், யார் முதல்வராக பதவியேற்பார்கள் என்பது பற்றி  யாரும் வாய் திறக்கவில்லை. தேர்தலில் போட்டியிடா விட்டாலும் கோலே முதல்வராக பதவியேற்பார் என்று தகவல் கசிந்துள்ளது.‘எதிர்க்கட்சியாக செயல்படுவேன்’முதல்வர் பவன்குமார் சாம்லிங் நேற்று டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், `நான் ஜனநாயகத்தின் போர் வீரன். மக்கள் என்னை எங்கு நிறுத்துகின்றனரோ அங்கு இருப்பேன். இம்முறை என்னை எதிர்க்கட்சியாக செயல்பட உத்தரவிட்டுள்ளனர்.  அதற்கு நான் மதிப்பளிக்கிறேன். இனிமேல் எதிர்க்கட்சி என்றால் என்ன, அது எப்படி செயல்படும் என்பதை காட்டுவேன்’ என கூறியுள்ளார்.



Tags : regime change ,Sikkim , 25 years ,later, Sikkim, Regime, change
× RELATED ஒடிசாவை தொடர்ந்து சிக்கிம்...