புதுவையில் முதன்முதலாக சிக்கினார் ஸ்டாம்ப் வடிவ போதைப்பொருள் விற்ற மருந்து விற்பனை பிரதிநிதி: திடுக் தகவல்கள்

புதுச்சேரி: புதுவையில் கஞ்சாவைவிட அதிக போதை கொண்ட எல்எஸ்டி எனும் உயர்ரக போதை பொருளை ஸ்டாம்ப் வடிவத்தில் விற்ற மருந்து விற்பனை பிரதிநிதியை போலீசார் கைது செய்தனர்.புதுவையில் கஞ்சா புழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நகர, கிராமப்புறங்களில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி கிடக்கின்றனர். இந்த நிலையில் கஞ்சாவைவிட  பலமடங்கு போதை நீடிக்கும் ஸ்டாம்ப் வடிவிலான புதிய உயர்ரக போதைபொருள் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படுவதாக சிறப்பு அதிரடிப்படை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் நேற்று முன்தினம் லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம் பகுதியில் தனிப்படை போலீசார் மப்டியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபரை இளைஞர்கள் அடிக்கடி சென்று சந்தித்தது  தெரியவரவே, அவரை சுற்றிவளைத்தனர். பின்னர், அவரது பேண்ட், சட்டைப்பையை சோதனையிட்டனர். அதில் ஸ்டாம்ப் வடிவிலான 26 எல்எஸ்டி (லிசர்ஜிக் அசிட் டைதிலமைட்) என்கிற உயர்ரக போதை பொருளை விற்றது தெரியவந்தது.

இதையடுத்து, ₹1.50 லட்சம் மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் லாஸ்பேட்டை வள்ளலார் நகர், முதலாவது தெருவில் வசிக்கும் அருண் (30) என்பதும், உயிரி மருத்துவம் படித்த இவர் மருந்து விற்பனை  பிரதிநிதியாக உள்ளதும், பெங்களூரில் இருந்து போதை பொருளை வாங்கி புதுச்சேரியில் விற்று வந்ததும் தெரியவந்தது. இதன்பின், அவரை கைது செய்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

12 மணி நேரம் நிற்கும் போதை

எல்எஸ்டி எனப்படும் புதிய ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருள், கஞ்சாவை விட கூடுதல் போதை கொடுக்கும். 10 கிராம் கஞ்சாவை ₹100 கொடுத்து வாங்கி பயன்படுத்தினால் சில மணிநேரமே போதை நிற்கும். ஆனால் எல்எஸ்டியை 0.1  மில்லி எடுத்து நாக்கில் வைத்தால் சில நிமிடத்தில் கரைந்து உடலில் கலக்கும். அதன்பிறகு 12 மணி நேரம் வரையில் போதை கிடைக்கும். ஸ்டாம்ப் வடிவிலான மனித உருவ கார்ட்டூன் படம் வரையப்பட்ட இந்த போதை பொருளை 4 துண்டாக  உடைத்து அருண் விற்று வந்துள்ளார். ஒரு துண்டு ₹1,500 வரையில் விற்றுள்ளார். அருண் செல்போன் நம்பரை கைப்பற்றி, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார், யார்? என்று விசாரித்து அவர்களையும் பிடிக்க உள்ளனர்.

Related Stories: