குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி தொடங்கியது: 1.50 டன் பழங்களால் அமைந்த மயில், மாட்டு வண்டி அலங்காரம்

குன்னூர்: 1.50 டன் பழங்களில் வண்ணத்துப்பூச்சி, மயில், மாட்டு வண்டி என பல்வேறு அலங்காரங்களுடன் பழ கண்காட்சி நேற்று தொடங்கியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று 61-வது பழ கண்காட்சி தொடங்கியது. இதில் 200 பழ வகைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  1.50 டன் பழங்கள் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள்,  ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை கொண்டு வண்ணத்துப்பூச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பழங்களிலான மயில், பழ மேடை,  மாட்டு வண்டி, கூடைகளுடன் பழம் விற்கும் தம்பதிகள், பழங்களால் ஆன நுழைவு வாயில் போன்ற  அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

இதுதவிர தோட்டக்கலை அரங்கில் 21 வகையான மாம்பழம், 13 வகையான வாழை, 4 வகையான பலா, பிளம்ஸ், பீச், ரம்பூட்டான், துரியன், ஆஸ்திரேலியா பைன் ஆப்பிள், மங்குஸ்தான் என 200 வகைகளில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை  சேர்ந்த பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. காட்சிக்கு பயன்படுத்தும் பழங்களை கண்காட்சி நிறைவடைந்ததும் ஜாம், ஜெல்லி, ஊறுகாய் போன்றவை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பழ கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களை  சேர்ந்த தோட்டக்கலை அரங்குகள், தனியார் பழ விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.  மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் பழ கண்காட்சியை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள், ராணுவ வீரர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.

Related Stories: