தமிழகம் முழுவதும் முதுகலை ஆசிரியர் காலி பணியிடம் விரைவில் நிரப்ப பட்டியல் தயாரிப்பு: புதிய பாடத்திட்டம் அறிமுகமாவதால் நடவடிக்கை

நெல்லை: புதிய கல்வியாண்டு துவங்குவதால் முதுகலை ஆசிரியர் காலிப் பணியிட விவரம் மாவட்டம் வாரியாக சேகரிக்கப்படுகிறது. 2019-20ம் கல்வியாண்டிற்காக பள்ளிகள் வருகிற 3ம் தேதி திறக்கப்பட உள்ளன.  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவச புதிய பாடப்புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு  பாடப்புத்தகங்கள் மாறும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை சந்திப்பவர்கள். கடந்த ஆண்டு மாற்றப்பட்ட 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் கடினமானதாக இருந்தது என ஆசிரியர்களும், மாணவர்களும் கருத்து  ெதரிவித்தனர். அதேபோல் இந்த ஆண்டு 12ம் வகுப்பிற்கான பாடத்திட்டங்களும் அதே பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே இதனை கற்றுக் கொடுக்க அனைத்து பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள் இருப்பது மிகவும் அவசியம் ஆகும்.

மேலும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளிலும் தேவையான முதுகலை ஆசிரியர்கள் இருப்பது முக்கியம். பல பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் முக்கிய பாடங்களுக்கு கூட காலியாக உள்ளன. வருகிற 31ம் தேதிக்குள் மேலும் பல  ஆசிரியர்கள் ஓய்வுபெறும் நிலையில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர் காலிப் பணியிடங்களை முழுமையாக எந்த இடையூறுமின்றி நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள், ெபற்றோர் கோரிக்கை விடுத்து  வருகின்றனர்.இதனிடையே 2019-20ம் கல்வியாண்டிற்கு முதுகலை ஆசிரியர்கள் காலி பணியிட பட்டியலை தமிழக பள்ளிக் கல்வித் துறை கோரியுள்ளது. அதாவது 1.6.2019ம் தேதி நிலவரப்படி சிறுபான்மை மொழி பாடப்பிரிவு உள்ளிட்ட அனைத்து  பாடங்களுக்குமான முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிட விவரங்களை முழுமையாக தயாரித்து அனுப்பி வைக்க மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணிகளை 27ம் தேதிக்குள் முடிக்குமாறு சிஇஓக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து பள்ளிகள் மற்றும் பாடங்கள் வாரியாக முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் குறித்த விபரங்களை தயாரித்து அனுப்பும் பணி  முதன்மைக் கல்வி அலுவலகங்களில் மும்முரமாக நடக்கிறது.

Related Stories: