×

தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி ஒருமனதாக தேர்வு: ஆட்சி அமைக்க ஜனாதிபதியிடம் உரிமை கோரினார்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி  எம்பி.க்களின் கூட்டத்தில், பிரதமராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை  கோரினார். நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியாகின. தேர்தல் நடந்த 542 தொகுதிகளில், பாஜ தலைமையிலான  தேஜ கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்றது.  இதில், பாஜ மட்டுமே 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி 91 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தனியாக 52 இடங்களை பிடித்தது. இதர  கட்சிகள் 99 இடங்களை வென்றன. தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான சம்பிரதாய நடைமுறைகளை பாஜ தொடங்கி இருக்கிறது. இதன்படி, முதல்கட்டமாக டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாக மைய மண்டத்தில் தேசிய ஜனநாயக  கூட்டணி  கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாஜ தலைவர் அமித் ஷாவும் தலைமை தாங்கினர்.

இதில், பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங், முரளி  மனோகர் ஜோஷி, நிதின் கட்கரி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, துணை  முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து பாஜ கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளரான ரவீந்திரநாத் குமார் (ஓபிஎஸ் மகன்) கூட்டத்தில் கலந்து கொண்டார்.இதேபோல், பாமகவைச் சேர்ந்த அன்புமணி,  தேமுதிக தரப்பில் எல்கே.சுதீஷ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் மற்றும்  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோரும் கூட்டத்தில்  கலந்து  கொண்டனர். தேஜ கூட்டணியில் உள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, அப்னா தளம், சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். தேஜ கூட்டணியில் வென்ற 352 எம்.பி.க்களும் இந்த  கூட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்று மாலை 5.40 மணிக்கு தொடங்கிய கூட்டம், ஒன்றரை மணி  நேரத்திற்கும் மேல் நடந்தது. இதில், நரேந்திரமோடியை பிரதமராகவும், தேஜ கூட்டணியின் நாடாளுமன்ற கட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்க,  பாஜ தலைவர் அமித்ஷா  முன்மொழிந்தார். இதை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர்  வழிமொழிந்தனர்.
இதைத் தொடர்ந்து, தேஜ கூட்டணியின் அனைத்து எம்பி.க்களும் அவரை ஒருமனதாக இப்பதவிகளுக்கு தேர்ந்தெடுத்தனர்.

இதை எம்பி.க்களின் பலத்த கரகோஷங்களுக்கு இடையே மோடி ஏற்றுக் கொண்டார். பின்னர், கூட்டணி கட்சித் தலைவர்களும், பாஜ மூத்த தலைவர்களும் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து, வாழ்த்தி பேசினர். இதைத் தொடர்ந்து, இரவு 8 மணியளவில் ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்தை சந்தித்த மோடி, தேஜ கூட்டணியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அவரிடம் ஒப்படைத்து, ஆட்சியமைக்க உரிமை  கோரினார். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து, மத்தியில் அடுத்த சில நாட்களில் மோடி தலைமையில் புதிய ஆட்சி அமைக்கப்பட உள்ளது. மோடி தனது பதவியேற்பு விழாவை வரும் 30ம் தேதி நடத்துவார் என்று கூறப்படுகிறது.

தேசியமே லட்சியம்மாநிலங்களே குறிக்கோள்
தேஜ கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பேசியதாவது:நீங்கள் என்னை தலைவராக தேர்வு செய்துள்ளீர்கள். இது ஒரு வழக்கமான நடைமுறைதான். ஆனால், நான் உங்களில் ஒருவன். உங்களுக்கு சமமானவன். தேஜ கூட்டணியில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. சக்தி மற்றும் கூட்டு  விளைவு. இந்த இரு அம்சங்களும்தான் நம்மை வலுவடையச் செய்துள்ளன. இந்த அரசு, ஏழை மக்களால் உருவாக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நம் மீது வைத்த நம்பிக்கையால்தான் நாம் இங்கு இருக்கிறோம். நாம் இன்னும் வெற்றி பெற  வேண்டும் என நம்புபவர்களுக்காவும் நாம் இங்கு இருக்கிறோம். இந்த தேர்தல், ஆளும் கட்சிக்கு ஆதரவான தேர்தல். ஆட்சியாளர்களுக்கு ஆதரவான அலை. இது மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான நம்பிக்கை மட்டுமல்ல; மக்களுக்கு இடையேயான நம்பிக்கையும் கூட. ‘தேசிய லட்சியம், மாநிலங்களே  குறிக்கோள்’ என்ற கோஷத்தை மனதில் வைத்து நாம் முன்செல்ல வேண்டும்.

நமது சேவைக்காகத்தான் மக்கள் நம்மை ஏற்றுக் கொண்டனர். அரசியல், அதிகாரத்தில் நாம் இருந்தாலும், மக்களுக்கு உதவ நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். விஐபி கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும். கடின உழைப்பைதான்  இந்த நாடு போற்றுகிறது. நேர்மைக்குத்தான் இந்த நாடு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இதுதான் நாட்டின் பக்தி. சமூக சமத்துவத்துக்கான புரட்சியாக இந்த தேர்தல் மாறியுள்ளது. இந்த தேர்தல் தடைகளை உடைத்து, இதயங்களை  இணைப்பதில் முக்கிய பங்காற்றி உள்ளது. மக்கள் புதிய யுகத்தை தொடங்கி உள்ளதை நாம் அனைவரும் பார்க்கிறோம். இந்த தேர்தலில் பெண்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர். ஆண் வாக்காளர்களுக்கு சமமாக பெண் வாக்காளர்கள்  வாக்களித்து உள்ளனர். எதிர்காலத்தில் பெண் வாக்காளர்கள், ஆண் வாக்காளர்களை மிஞ்சுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுக கேட்டதுபாஜ மவுனம்
தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர்  ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்டு அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.  ஆனால், இதற்கு பாஜ தரப்பில் தற்போது வரை  எந்த  பதிலும் தெரிவிக்கப்படவில்லை. அதனால், மத்தியில் புதியதாக அமையும் ஆட்சியில்  அதிமுக அங்கம் வகிக்குமா அல்லது கழற்றி விடப்படுமா என்ற சந்தேகம்  எழுந்துள்ளது.

Tags : Narendra Modi ,meeting ,President ,NPM , National Democratic,elected ,s prime minister,government
× RELATED வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும்...