×

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கவிழ்த்த பருப்பு, மஞ்சள் விவசாயிகள்: 178 பேர் 1,36,800 ஓட்டுகளை பெற்று தோற்கடித்த பரிதாபம்

ஐதாராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு எதிராக 178 விவசாயிகள் தேர்தலில் போட்டியிட்டு, 1,36,800 ஓட்டுகளை  பெற்று அவரை தோற்கடித்தனர். இந்த தேர்தல் முடிவு, மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.  தெலங்கானா மாநில முதலமைச்சரும்  தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கல்வகுண்ட்லா கவிதா, 2014 மக்களவைத் தேர்தலில்  நிஜாமாபாத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த தொகுதியில் ரயில் இணைப்பு கொண்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும்,  விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அவர் செவிசாய்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, ‘மஞ்சள் வாரியத்தை நிஜாமாபாத்தில்  அமைக்க வேண்டும்’ என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

அதேபோல, ‘மைசூர் பருப்பு விவசாயிகள் தங்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல  கோரிக்கைகளை விடுத்தனர். அவற்றைக் கவிதா பூர்த்தி செய்யாததால், விவசாயிகள் தரப்பு கடும் அதிருப்தி அடைந்து இருந்தனர். இதனால்,  நிஜாமாபாத் தொகுதியில் 178 மஞ்சள், பருப்பு விவசாயிகள், இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட 7 கட்சிகளின்  வேட்பாளர்களையும் சேர்த்து 185 பேர் போட்டியிட்டனர். இதனால், நிஜாமாபாத் தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக  வாக்குச் சீட்டுகள் முறையில் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தெலங்கானா மாநிலத்திலுள்ள  17 தொகுதிகளில் 9 இடங்களில் டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும், பாஜ 4 இடங்களிலும், அசாதுதீன் ஓவைசியின்  அகில இந்திய மஜ்லிஸ் இ இட்டகத்துல் முஸ்லிமின் கட்சிக்கு 1 இடமும் கிடைத்துள்ளது.

 ஆனால், நிஜாமாபாத் தொகுதியில் பாஜ வேட்பாளர் அரவிந்த்தியிடம் 70,875 வாக்குகள் வித்தியாசத்தில் கவிதா தோல்வியுற்றார். மாநில  முதலமைச்சரின்  மகள் தோல்வியைத் தழுவியதை, அங்கிருக்கும் டிஆர்எஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த தொகுதியில் பாஜ  4,80,584 வாக்குகளும், டிஆர்எஸ் 4,09,709 வாக்குகளும் பெற்று, முறையே இக்கட்சிகள் 45.22 சதவீதம் மற்றும் 38.55 சதவீத வாக்குகளைப்  பெற்றுள்ளன. கவிதாவின் மீதான கோபத்தில் போட்டியிட்ட மஞ்சள், பருப்பு விவசாயிகள் கிட்டத்தட்ட 9.27 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  அவர்கள், சுமார் 1,36,800 வாக்குகளைக் கைப்பற்றியுள்ளனர். இந்த வாக்குகள் தான் கவிதாவின் வெற்றியைப் பறித்துள்ளது.



Tags : Chandrasekara Rao ,Telangana ,Kavitha , Telangana CM Chandrasekara Rao, daughter Kavitha, chopped, yellow farmers, pity
× RELATED கெஜ்ரிவால், கவிதாவுக்கு மே.7 வரை காவல் நீட்டிப்பு