×

கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் குடிநீருக்கு தவிக்கும் மக்கள்

கூடுவாஞ்சேரி: சென்னை நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 1 முதல் 12 வார்டுகள்  நந்திவரம் பகுதியிலும், 13 முதல் 18 வார்டுகள் கூடுவாஞ்சேரி பகுதியிலும் உள்ளன. நந்திவரம் பகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பல  லட்சம் மதிப்பில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள், கைப்பம்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை பேரூராட்சி ஊழியர்கள் முறையாக பராமரிக்காததால்  குடிநீர் வருவதில்லை. ஒருசில இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நீர் இறைக்கும் மின் மோட்டார்களும் பழுதாகியுள்ளது. இதன்காரணமாக இப்பகுதியில் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.

ஒரு குடம் நீருக்காக மக்கள் நீண்ட தூரம் அலைந்து வருகின்றனர். பெருமாட்டுநல்லூர்  பெரிய ஏரியில் பேரூராட்சி சார்பில், 4 குடிநீர் கிணறுகள் அமைத்து, பைப்லைன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனினும், பைப்லைன்  செல்லும் வழியில் பலர் தனியே ஒரு பைப் மூலம் தங்களது வீடுகளுக்கு மறைமுகமாக தண்ணீரை உறிஞ்சி வருகின்றனர். இதனால் அரைமணி நேரம்  மட்டுமே வரும் குடிநீரை பிடிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பேரூராட்சியில் குடிநீர் டேங்கர் லாரிகள் இருந்தும், அதன்மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில்லை. இதனால் காலி குடங்களுடன் நீண்ட  நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பேரூராட்சியில்  போதிய நிதி இருந்தும், இங்கு நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க செயல் அலுவலர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பேரூராட்சிகளின் இயக்குநர், மாவட்ட கலெக்டர் நேரில் தலையிட்டு முறைகேடுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Guduvancheri Panchayat, drinking water, people
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...