×

16-வது மக்களவை கலைப்பு: இன்று இரவு ஜனாதிபதியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் பிரதமர் மோடி

டெல்லி: இன்று இரவு 8 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க பிரதமர் மோடி உரிமை கோருகிறார். நாடாளுமன்ற  மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை மீண்டும்  தக்கவைத்துக் கொண்டது. தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, புதிய  ஆட்சியை அமைப்பதற்கான வழக்கமான நடைமுறைகளை தொடங்கி உள்ளது. இந்நிலையில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை  கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைக்க முடிவெடுக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரைப்படி 16-வது மக்களவையை கலைக்க  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு  நாடாளுமன்ற மத்திய அரங்கில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, பிரதமராக மீண்டும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.  முன்னதாக இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் அனைவரும் இன்று  மாலைக்குள் டெல்லி வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்தவுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கு  பிரதமர் மோடி உரிமை கோர உள்ளார். அதன்பின், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு போன்ற நடைமுறைகள் குறித்த தேதி  உறுதிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பிரதமர் மோடி வரும் 29ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

அதற்கு முன்பாக, மோடி வாராணசி சென்று தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும், காந்திநகருக்குச் சென்று தனது தாயாரிடம் ஆசிர்வாதம் பெறவும்  திட்டமிட்டுள்ளார். பதவியேற்பு விழாவில் உலக தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் விழாவில் பங்கேற்க  உறுதியளித்திருந்தாலும், தேதியை உறுதி செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. அதனால், மோடி பதவியேற்பு விழா தேதியை அறிவிப்பதில் தாமதம்  ஆவதாக செய்திகள் கூறுகின்றன.


Tags : demolition ,Narendra Modi ,Lok Sabha ,president , The dissolution of the 16th Lok Sabha, the President and Prime Minister Modi
× RELATED மக்களவை தேர்தலை முன்னிட்டு 2 நாள்...