கோகைன் போதை பொருள் தயாரித்து விற்ற 5 பேர் கைது : 10 கிலோ பறிமுதல்

பூந்தமல்லி: வளசரவாக்கம் பகுதியில் கோகைன் போதை பொருளை தயாரித்து விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. போரூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் கோகைன் எனப்படும் ேபாதை பவுடர் தயாரித்து, வளசரவாக்கம் மற்றும் சுற்றுப் பகுதிகளில், கல்லூரி மாணவர்கள், ஐ.டி.ஊழியர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுவதாக வளசரவாக்கம்  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில், நேற்று காலை ஆலப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.  அப்போது, அங்கு, கோகைன் எனப்படும் போதை பவுடரை போலியாக தயாரிப்பது தெரிந்தது.

இதையடுத்து, அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த சசிதரன் (29), தமிழ்வாணன் (46) ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். அந்த வீட்டில் இருந்து 2 கிலோ போதை பவுடரை பறிமுதல் செய்தனர். அவர்கள் கொடுத்த  தகவலின் பேரில் வளசரவாக்கம், திருவள்ளுவர் தெருவில் உள்ள ஒரு மாந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ போதை பவுடரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய வில்லிவாக்கத்தை சேர்ந்த முருகேசன் (33), குன்றத்தூர் அமர்நாத் (25), சரவணன் (26) ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த போதை பவுடர் தயாரிப்பில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா,  இதற்கான மூலப்பொருட்களை எங்கிருந்து வாங்கி வந்தனர், என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: