மாணவர்களை வேறு கட்டிடத்துக்கு மாற்றியதால் செயல்படாத பள்ளியில் பெருகும் குற்றச்சம்பவம்: அதிகாரிகள் அலட்சியம்

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 195வது வார்டுக்கு உட்பட்ட கண்ணகி நகர் அருகே எழில் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள மாணவர்களுக்காக, கடந்த 5 ஆண்டுக்கு முன், தமிழக அரசு சார்பில் ₹11 லட்சம் மதிப்பீட்டில்  நடுநிலைப் பள்ளி கட்டிடம்  கட்டப்பட்டது. பின்னர் தனியார் நிறுவனம் மூலம் ₹4 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு சுற்றுச்சுவர்  கட்டப்பட்டு 5ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மாணவ மாணவியர் பயின்று வந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் அதே பகுதியில் புதிய  கட்டிடத்துக்கு பள்ளி மாற்றம் செய்யப்பட்டது. இதனால், பழைய பள்ளி கட்டிடம் கடந்த ஓராண்டாக மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. தற்போது, பள்ளி நுழைவாயிலில் உள்ள கதவின் பூட்டை உடைத்து சிலர் மது அருந்துதல், கஞ்சா அடித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு  வருகின்றனர்.

மேலும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் பள்ளி வளாகம் மாறியுள்ளது. எனவே பள்ளி கட்டிடத்தை சமூக விரோதிகள் பிடியில் இருந்து மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஒரு வருட காலமாக  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை இப்பகுதி மக்கள் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகள் இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து பள்ளி கட்டிடத்தில் நடந்து வரும் சமூகவிரோத செயலை தடுத்து நிறுத்துவதோடு, பள்ளி கட்டிடத்தை மீண்டும் வேறு பயன்பாட்டிற்கு  கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: