×

ஆட்சி இழந்த 3 மாநிலங்களில் 65ல் 61ஐ வென்ற பாஜ

புதுடெல்லி: மத்தியப் பிரேதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சியை இழந்த 5 மாதத்திலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது பாஜ. இம்மூன்று மாநிலங்களில் நடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 65 இடங்களில் 61ஐ பாஜ  கைப்பற்றி சாதித்துள்ளது.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜவை வீழ்த்திய காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவு மக்களவை  தேர்தலிலும் பிரதிபலிக்கும் என காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால், ஐந்தே மாதத்தில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திவிட்டது பாஜ.காங்கிரஸ் ஆட்சியின் கீழ் உள்ள இம்மூன்று மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 65 மக்களவை தொகுதிகளில் 61ஐ பாஜ கைப்பற்றி உள்ளது. மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகளில் 28ஐ கப்பற்றி உள்ளது. எஞ்சிய ஒரு தோல்வி கூட மிக மிக  குறைவான வாக்கு எண்ணிக்கையில்தான் ஏற்பட்டது..  இம்மாநிலத்தில் முதல்வராக பொறுப்பேற்ற கமல்நாத், தனது சிந்த்வாரா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் நகுல்நாத் 5.86 லட்சம் வாக்கு பெற்று வெற்றி பெற்றாலும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜ  வேட்பாளர் நாதன்சா கவ்ரேத்தி 5.48 லட்சம் வாக்குகள் பெற்று கடும் போட்டி கொடுத்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா வலுவான குணா தொகுதியில் பாஜ.விடம் தோல்வி அடைந்தார். கடந்த 2014ல் பாஜ இம்மாநிலத்தில் 27 இடங்களில் வென்ற போது கூட குணா, சிந்த்வாரா தொகுதிகளில் காங்கிரசிடம்  ேதாற்றது. ஆனால், இம்முறை குணா தொகுதியை காங்கிரசிடமிருந்து பாஜ பறித்துள்ளது. இதே போல, சட்டீஸ்கரில் 11 தொகுதியில் 9ஐ பாஜ கைப்பற்றியுள்ளது. இங்கு, கடந்த தேர்தலில் போட்டியிட்ட அனைவரையும் மாற்றி புதிய வேட்பாளர்களை பாஜ களமிறக்கியது. கடந்த 2014ல் இங்கு பாஜ 10 தொகுதியில் வென்றிருந்தது. இங்கு  காங்கிரசுக்கு இம்முறை 2 தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது.ராஜஸ்தானைப் பொறுத்த வரையில் 25ல் 24 தொகுதியை மொத்தமாக பாஜ அள்ளியிருக்கிறது. எஞ்சிய நாக்பூர் தொகுதி கூட ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை. அங்கு புதிய கட்சியான ராஷ்டிரிய லோக்தன்ரிக் கட்சி தலைவர்  ஹனுமன் பெனிவால் 6.55 லட்சம் வாக்கு பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மிர்தா 4.76 லட்சம் வாக்குடன் தோல்வி அடைந்தார்.   



Tags : states ,regime ,BJP , states,lost power, Bhajji, 65
× RELATED அமித்ஷாவா.. சந்தான பாரதியா? மக்களை குழப்பும் பாஜவினரின் போஸ்டர்