பிரக்சிட் மசோதா தோல்வியால் பிரதமர் பதவியை துறக்கிறார் தெரசா : ஜூன் 7ம் தேதி விடை பெற முடிவு

லண்டன்: பிரக்சிட் மசோதா நிறைவேற்றுவதில் தனது அமைச்சர்கள் மற்றும் சொந்த கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்காததால், இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து அடுத்த மாதம் 7ம் தேதி விலகுவதாக தெரசா மே அறிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து, இங்கிலாந்து விலக கடந்த 2016ம் ஆண்டு நடந்த பொதுவாக்கெடுப்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மார்ச் இறுதியில் வெளியேற இங்கிலாந்து முடிவு செய்திருந்தது. ஆனால், அயர்லாந்து  எல்லை பிரச்னை, அண்டை நாடுகளுடனான வர்த்தகம் உட்பட பல பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய பின்பும், ஐரோப்பிய நாடுகளுடனான் உறவு மற்றும் வர்த்தகத்தில்,  ஐரோப்பிய யூனியன் விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலையில் பிரக்சிட் ஒப்பந்தம் உள்ளது. இதை ஏற்காதபட்சத்தில், எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் இங்கிலாந்து வெளியே வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தெளிவாக  கூறிவிட்டது.  பிரக்சிட் தொடர்பாக பிரதமர் தெரசா மே கொண்டு வந்த வரைவு மசோதாக்கள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 3 முறை தோல்வியை சந்தித்தன.

 இந்த மசோதாவை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஆளும் கட்சி எம்.பிக்கள், மற்றும் எதிர்கட்சிகளுடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இந்த விஷயத்தில் ஆளும் கன்சர்வேடிவ்  கட்சி எம்.பி.க்கள் இடையே ஒற்றுமை இல்லை.  இதனால், பிரக்சிட் மசோதாவை நிறைவேற்றுவதற்கு அவர் 4வது முறையாக வாக்கெடுப்பை சந்திக்க விரும்பவில்லை. இதனால் பிரதமர் பதவியில் இருந்து அடுத்த மாதம் 7ம் தேதி விலகுவதாக தெரசா மே நேற்று அறிவித்தார். இதையடுத்து இங்கிலாந்துக்கு புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான போட்டி நடக்கவுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், அடுத்த மாத துவக்கத்தில் இங்கிலாந்துக்கு வருகிறார். அப்போது தெரசா மே பொறுப்பு பிரதமராக இருந்து வரவேற்பார் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரிமி ஹன்ட் கூறியுள்ளார். இங்கிலாந்தில்  பதவி ஏற்கும் புதிய பிரதமர் பிரக்சிட் தொடர்பாக, ஐரோப்பிய யூனியனுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது.

ஐரோப்பிய யூனியன் உறுதி

இங்கிலாந்து பிரதமரின் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த ஐரோப்பிய யூனியன் கமின் தலைவர் ஜேன் ஜங்க்ர் கூறுகையில், ‘‘இங்கிலாந்து பிரதமர் தெரசா மே முடிவால், எந்த தனிப்பட்ட மகிழ்ச்சியும் இல்லை. பிரக்சிட் ஒப்பந்தம்  தொடர்பாக ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். தெரசா மோ ராஜினாமாவால், பிரக்சிட் பேச்சுவார்த்தையில் எந்த மாற்றமும் ஏற்படாது’’ என்றார்.

Related Stories: