விஜயவாடா இந்திரா மைதானத்தில் ஜெகன் பதவியேற்க ஏற்பாடுகள் தீவிரம்

திருமலை: விஜயவாடா இந்திரா மைதானத்தில் வருகிற 30ம் தேதி ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்க உள்ளார். இதற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.ஆந்திராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 150 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கட்சி 24 இடங்களிலும்,   ஜனசேனா கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றது.  இந்நிலையில், ஜெகன் மோகன் வரும் 30ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்காகன பதவியேற்பு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மூத்த தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் அதிகளவில் வருவார்கள் என்பதால் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மாநகராட்சி மைதானத்தில் பதவியேற்பு விழாவை நடத்த அதிகாரிகள் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணா மாவட்டம், தாடேப்பல்லியில் உள்ள  ஜெகன்மோகன் ரெட்டியின் இல்லத்தில் காவல் துறை,  வருவாய் துறை  உட்பட 57 துறை செயலாளர்கள், ஆணையாளர்கள் 23  அதிகாரிகளுடன் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதன்மை செயலாளர் எல்.வி. சுப்பிரமணியம் ,  டிஜிபி ஆர்.பி.தாக்கூர் உட்பட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். ஜெகன்மோகன் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் அவருக்காக சிறப்பு பாதுகாப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டை சுற்றி புலனாய்வு த்துறை  போலீசாரும், மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டிக்கு மத்திய புலனாய்வுத்துறை உத்தரவின்படி இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவர் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் முதல்வருக்கான உயர் பாதுகாப்பு  வழங்கும் பணியில்  காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டியின் பாதுகாப்புக்காக  6  குண்டு துளைக்காத வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: