ஓரம் கட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் ஆசி பெற்றார் மோடி: காலில் விழுந்தும், கட்டிப்பிடித்தும் பரவசம்

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு முன்பாக கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை சந்தித்து மோடியும், அமித் ஷாவும் ஆசி பெற்றனர். பாஜ.வின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்து, அதன் செல்வாக்கை உயர்த்திய மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரை, மக்களவை தேர்தலின் போது பிரதமர் மோடியும், பாஜ தலைவர் அமித் ஷாவும் கட்டம் கட்டினர். அவர்களின் வயதை காரணம் காட்டி, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காமல் அவமானப்படுத்தினர்.

இதனால், பாஜ.வில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. குறிப்பாக, அத்வானி ஓரம் கட்டப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் வேதனை தெரிவித்தனர். ஒரு கட்டத்தில், அத்வானி சிறிது ஆவேசப்பட்டு கட்சித் தலைமைக்கு எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், மக்களவை தேர்தலின்போது பாஜ.வில் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உருவானது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அத்வானி :உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தனர்.

இந்தநிலையில், இந்த மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து,  பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் பிரதமராகிறார். வரும் 30ம் தேதி அவர் பதவியேற்பார் என தெரிகிறது. தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டு பாஜ மூத்த தலைவர்களை பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரில் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் வீடுகளுக்கு நேற்று காலை சென்ற பிரதமர் மோடி அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அவர்களை கட்டியணைத்து பரவசப்பட்டார். அவருடன் அமித் ஷாவும் சென்று ஆசி பெற்றார்.

இவர்கள் இன்றி கட்சியே இல்லை:

அத்வானி, ஜோஷியிடம் ஆசி பெற்ற பிறகு தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘இவர்களை போன்ற மிக உயர்ந்த தலைவர்கள் பல ஆண்டுகளாக கட்சியை கட்டமைத்ததாலும், புதிய சித்தாந்தங்களை மக்களுக்கு வழங்கியதாலும் தான் பாஜ.வின் இந்த வெற்றி சாத்தியமானது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: