பட்டுக்கூடு அங்காடிக்கு இனி கடன் கேட்டு வராதீங்க: அதிரடி உத்தரவு போட்ட அதிகாரிகள்

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகளை வாங்கும் பட்டு நூற்பாளர்களுக்கு இனிமேல் கண்டிப்பாக கடன் கொடுக்க முடியாது என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், அன்னூர், சூலூர், அன்னூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 996 விவசாயிகள் பட்டு விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். பட்டுப்புழுவை வளர்க்கும் விவசாயிகள் அதன் மூலம் கிடைக்கும் கூடுகளை கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டு வளர்ச்சிதுறை அலுவலகத்தில் செயல்படும் பட்டுக்கூடு அங்காடியில் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

அங்கு வரும் பட்டு நூற்பாளர்கள் (ரீலர்ஸ்), மற்றும் சர்வோதயா சங்கத்தினர் விவசாயிகளின் கூடுகளை வாங்கிச்செல்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, தனியார் பட்டு நூற்பாளர்கள் மற்றும் சர்வோதயா சங்கத்தினர் என மொத்தம் 10 பட்டு நூற்பாளர்கள் கோவையில் உள்ள பட்டுக்கூடு அங்காடிக்கு வந்து பட்டுக்கூடுகளை வாங்கிச் செல்கின்றனர். இதற்காக விவசாயிகள் அரசுக்கு புள்ளி 75 சதவீதமும், பட்டு நூற்பாளர்கள் மற்றும் சங்கத்தினர் புள்ளி 75 சதவீதமும் கட்டணமாக செலுத்துகின்றனர்.

 மாதம் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கிலோ வரை பட்டுக்கூடுகள் இந்த அங்காடியில் விற்பனையாகிறது. இதன் மூலம் அரசுக்கு மாதந்தோறும் சராசரியாக ரூ.1.5 லட்சம் வரை வருமானம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், பட்டுக்கூடுகளை வாங்க வரும் தனியார் நூற்பாளர்கள் பல லட்சம் மதிப்பிலான பட்டுக்கூடுகளுக்கு, சில ஆயிரங்களை மட்டும் முன்பணமாக செலுத்தி மீதி பணத்தை கடன் வைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.

அவ்வாறு கடன் வைத்த பணத்தை பல நாட்களாக செலுத்துவதில்லை என்றும், பணம் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் அடுத்த மகசூல் செய்ய கடன் வாங்கும் நிலை உருவாகி விடுவதாகவும் விவசாயிகள் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில், பட்டுக்கூடு அங்காடியில் விசாரணை மேற்கொண்ட பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு, இனிமேல் பட்டு நூற்பாளர்களுக்கு கடன் கொடுக்கப்படமாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த உத்தரவு அங்காடியில் அனைத்து நூற்பாளர்களுக்கும் தெரியும் வண்ணம் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்டு வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘‘பணம் தாமதமாக கிடைப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம். இனிமேல் எந்த ஒரு நூற்பாளருக்கும் கடன் கொடுக்கப்படமாட்டாது. நூற்பாளர்கள் வாங்கும் பட்டுக்கூடுகளுக்கு பணத்தை நேரடியாகவோ, காசோலை மூலமாகவோ அல்லது இணைய பரிமாற்றம் மூலமாகவோ வாங்கும் நாளிலே செலுத்த வேண்டும். இதன்மூலம் விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணம் உடனடியாக கிடைக்கும்’’ என்றனர்.

Related Stories: