ரயில்வே அப்ரண்டீஸ் பணிகளில் இனி தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்: வாரியத்துக்கு தொழிற்சங்கம் பாராட்டு

மன்னார்குடி; தமிழகத்தில் உள்ள ரயில்வே தொழிற்சாலைகள் அப்ரண்டீஸ் பணிகள் நியமனங்களில் ரயில்வே விதிகளை இதுவரை பின்பற்றாமல் இருந்து வந்தன. இதனால் வட இந்தியர்கள் பணிகளில் சேர துவங்கினர். இதனால் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அண்மையில் திருச்சி பொன்மலை, கோவை போத்தனூர் ரயில்வே தொழிற்சாலை அப்ரண்டீஸ் தேர்வில் ஏற்கனவே 1984ம் ஆண்டு வாரிய உத்தரவின்படி வசிப்பிட தகுதி நிர்ணயம் செய்யப்படாததால்தான் வடமாநிலத்தவர்கள் அதிக சேர்க்கைக்கு மூல காரணமாக அமைந்து விட்டது.

இந்த சூழலில் ரயில்வே விதிகள் அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களையே அப்ரண்டீஸ் பணிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் என விதி இருப்பதை தினகரன்’’ நாளிதழ், தொழிற்சங்க தலைவர்களுடன் பேட்டி எடுத்து வெளி கொண்டு வந்தது. இதனையடுத்து சென்னை பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலை கடந்த 20ம் தேதி 990 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் 1984ம் ஆண்டு ரயில்வே  வாரிய உத்தரவின்படி அந்த விதியை பின்பற்றி தமிழக வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்தவர்கள்  மட்டுமே தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணை பொதுச்செயலாளர் மனோகரன் கூறியதாவது:  

அப்ரண்டீஸ் என அழைக்கப்படும் தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை போத்தனூர் மற்றும் திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலைகளில் 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. பொன்மலை மையத்தில் 1600 வட மாநிலத்தவர்கள், 150 தமிழகத்தினர் சேர்த்து 1750 பேர், போத்தனூர்  மையத்தில் 1187 வட மாநிலத்தவர்கள், 126 தமிழகத்தினர், 622 மற்ற தென் மாநிலத்தவர்கள் சேர்த்து 1935 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த தேர்வு முறையில் முறைகேடுகள் நடந்துள்ளது.

தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கடுமையாக எழுந்துள்ளது. இந்த அப்ரண்டீஸ்கள் தேர்வு முறையில் ரயில்வே வாரிய உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை. பொன்மலை மற்றும் போத்தனூர் ரயில்வே தொழிற்சாலைகள் வசிப்பிட தகுதி நிர்ணயம் செய்ய தவறி விட்டன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மற்ற மாநிலத்தவர்கள் விண்ணப்பித்து தேர்வாகி உள்ளனர் என்பதே இதற்கான காரணம் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சுட்டிக் காட்டியது. இதை கடந்த மே 11ம் தினகரன் நாளிதழ் காற்றில் பறந்த வாரிய உத்தரவு என செய்தியாக வெளியிட்டது.

இந்நிலையில் கடந்த மே 20ம் தேதி பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலை கார் பென்டர் 80, எலக்ட்ரீசியன் 200, பிட்டர் 260, மெசினிஸ்ட் 80, பெயின்டர் 80, வெல்டர் 290 என மொத்தம் 990 அப்ரண்டீஸ் நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் தமிழக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையை இணைத்து விட்டது. இதனால் 990 அப்ரண்டீஸ்கள் தமிழகத்தில் இருந்து மட்டுமே தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: