தங்கதமிழ்செல்வன் திடுக் தகவல் பிரதமர் மோடியின் ஆதரவுடன் ஓ.பி.எஸ் முதல்வராக போகிறார்

தேனி: மோடி ஆதரவுடன் ஓபிஎஸ் விரைவில் முதல்வராக பொறுப்பேற்பார்’’ என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் திடுக் தகவலை தெரிவித்து இருக்கிறார். தேனியில் தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பணம் பாதாளம் வரை பாயும் என்பது தேனி மக்களவை தொகுதி தேர்தலில் நிரூபணமாகி உள்ளது.

தேனி மாவட்டம், விவசாய கூலித்தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம். 100 ரூபாய் தினக்கூலிக்காக பல மணிநேரம் வேலை செய்யும் அவர்கள், ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 5 ஆயிரம் ரூபாய் வரை ஓட்டுக்கு கிடைத்ததால் ஓபிஎஸ் மகனுக்கு ஓட்டளித்துள்ளனர். எம்எல்ஏவாக வெற்றி பெற 100 கோடி ரூபாயும், எம்பியாக வெற்றி பெற 500 கோடி ரூபாயும் தேவைப்படும் என்பது தேனி மக்களவை தேர்தல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மத்தியில் அசுர பலம் பெற்றுள்ள மோடியின் ஆசி ஓபிஎஸ்சுக்கு உள்ளது. எனவே எடப்பாடி பழனிசாமியை விரைவில் வீழ்த்தி விட்டு, முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

பலர் எனக்கு ஓட்டளிப்பதாக நினைத்து இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விட்டனர். தேர்தல் சின்னமும் எங்களின் பின்னடைவுக்கு ஒரு காரணம். இந்த தேர்தல் மூலம் மக்கள் எங்களை வெறுக்கவில்லை. அதிமுக - பாஜ கூட்டணியை வெறுத்துள்ளனர். நான் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு போடப்போவது இல்லை. வழக்கு போட்டால் என்ன நடக்கும் என்பது தெளிவாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: