தமிழகத்தில் பா.ஜ. படுதோல்வி எதிரொலி தமிழிசையை மாற்ற கட்சி மேலிடம் முடிவு: புதிய தலைவர் விரைவில் நியமிக்க வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் பாஜ படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, மாநில பாஜ தலைவர் தமிழிசையை மாற்ற கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாஜ கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த 5 தொகுதிகளிலும் பாஜ படுதோல்வி அடைந்தது.  

குறிப்பாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சிவகங்கையில் போட்டியிட்ட எச்.ராஜா ஆகியோர் 3 லட்சத்துக்கு குறைவான வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளனர். இந்த படுதோல்வி தமிழகம் முழுவதும் உள்ள மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. காரணம், வடஇந்தியா முழுவதும் பாஜ அமோக வெற்றிபெற்றுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லையே என்பதுதான் அவர்களின் ஆதங்கம்.

அதேபோன்று, டெல்லி பாஜ தலைவர்களையும் இது யோசிக்க வைத்துள்ளது. எப்படியாவது திராவிட கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் கால்ஊன்ற பல ஆண்டுகளாக துடித்து வந்த பாஜ மேலிட தலைவர்கள் இதற்காக காய் நகர்த்தி வந்தனர். அதற்கு ஏற்றார்போல் அதிமுக அரசை, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டனர். இதனால் அதிமுக தொண்டர்களின் எதிர்ப்பையும் மீறி பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்தது. ஆனாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜ வெற்றிபெற முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம், தமிழக பாஜ தலைமை என்று அக்கட்சி தொண்டர்களே தற்போது குற்றம் சாட்டுகிறார்கள். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று மூச்சுக்கு முன்னூறு முறை தமிழிசை கூறி வந்தார். அதேநேரம், தமிழகத்தில் உள்ள அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களையும் விமர்சனம் செய்தார். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினால், யோசிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பதில் அளிப்பதே வாடிக்கையாக இருந்தது.

இதனால், சமூக வலைதளங்களில் தமிழிசையை கிண்டல் செய்து பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஆனாலும், அவர் தனது நடவடிக்கையை மாற்றிக்கொள்ளவில்லை.தமிழகத்தில் பாஜ கட்சி தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் 5 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வருகிறார். ஆனால் தமிழகத்தில் பாஜ ஒரு சதவீதம் கூட வளர்ச்சி அடையவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபடாமல், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதில்தான் அவர் முக்கியத்துவம் காட்டுவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உண்டு. கடந்த ஆண்டு தூத்துக்குடி விமானத்தில் சென்றபோது ஒரு பட்டதாரி பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு, அவர் வெளிநாடு செல்ல முடியாமல் புகார் அளித்தது போன்ற சம்பவங்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

இவ்வளவு நடந்த பிறகும், அதே தூத்துக்குடி தொகுதியில் அவர் பாஜ வேட்பாளராக நின்றார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி போட்டியிட்டார். அப்போதே இவரது தோல்வி உறுதியானது. காரணம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர் மக்கள் 13 பேரை போலீசார் குருவியை சுடுவது போல் சுட்டுக் கொன்றனர். இதுவும் தூத்துக்குடி மக்களின் கோபத்துக்கு ஒரு காரணம்.

தற்போது தேர்தலில் தமிழிசை 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழியிடம் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் தமிழிசை சவுந்தரராஜனை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று டெல்லி பாஜ கட்சி மேலிடத்துக்கு தமிழக பாஜ மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சி மேலிடமும் இந்த கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

பல ஆண்டுகளாக மாநில தலைவராக இருந்தும், பாஜ கட்சி தமிழகத்தில் வளரவில்லை. இனியும் தமிழிசையை தலைவர் பதவியில் நீடிக்க அவர்களுக்கும் விருப்பம் இல்லை. அதனால் தமிழகத்துக்கு புதிய பாஜ தலைவர் ஒருவர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக பாஜ மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார். முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பாஜ படுதோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதில்தான் அவர் முக்கியத்துவம் காட்டுவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உண்டு.

Related Stories: