மதச்சார்பற்ற கூட்டணி அமோக வெற்றி: கூட்டணி கட்சி தலைவர்கள் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 37 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற்றது. வேட்பாளர்கள் வெற்றிக்காக அயராது உழைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று காலை அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் திரண்டு நின்று சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட தலைவர்களுடன் அறிவாலயத்துக்கு வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், அக்கட்சியின் சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சின்ராசு ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசர், வசந்தகுமார், செல்லக்குமார், ஜெயக்குமார், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், விஷ்ணு பிரசாத், ஜோதிமணி ஆகியோரும் சென்றிருந்தனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கவிஞர் வைரமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் வென்ற ரவிக்குமார், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் அக்கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற சுப்பராயன், செல்வராஜ்,

புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், அக்கட்சி சார்பில் வெற்றி பெற்ற நவாஸ் கனி, முகமது அபுபக்கர் எம்எல்ஏ மற்றும் ஐஜேகே கட்சி மாநில தலைவர் பாரிவேந்தர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமி ஆகியோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதுபோன்று பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகளும், நாடாளுமன்ற தேர்லில் திமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: