. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கு நாடாளுமன்ற தேர்தல் ஒரு முன்னோடி: திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கு நாடாளுமன்ற தேர்தல் ஒரு முன்னோடியாக உள்ளது என்று கூட்டணி கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக கூட்டணி பெற்ற வெற்றியை தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின்பு கட்சி தலைவர்கள் அளித்த பேட்டி:

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: திமுக கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இது தமிழகத்தை பொறுத்தவரை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கு இந்த நாடாளுமன்ற தேர்தல் ஒரு முன்னோடி. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறாமல் போனது பெரிய வருத்தத்துக்குரியது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கடினமாக உழைத்தனர்.

ஆனாலும் வெற்றி வாய்ப்பை பெற முடியவில்லை. அதுபற்றி சிந்திக்கும் நிலையில் நாங்கள் உள்ளோம். பாஜ இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருப்பது மக்கள் மத்தியில் மிகப் பெரிய கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலின் பங்கு அளப்பரியது.

 

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்: மீண்டும் மீண்டும் தமிழகம் சமூக நீதி மண் என்றும், தமிழர்கள் இங்கு மதத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளனர். அப்படி வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். ரத்து செய்யப்பட்டிருக்கிற வேலூர் நாடாளுமன்ற தேர்தலையும் தேர்தல் ஆணையம் விரைவில் நடத்தும். அங்கேயும் திமுக மகத்தான வெற்றியை பெறும்.

அங்குள்ள பெரும்பான்மை மக்கள் ராமதாசின் உண்மையான முகத்தை தெரிந்து கொண்டுள்ளனர். அவர் இத்தனை நாட்களாக வன்னியர் இனத்தை ஏமாற்றி தானும் தனது குடும்பம் மட்டுமே வாழ்ந்தார் என்பதை உணர்ந்து கொண்டு, நாங்கள் வாக்களிக்கக் கோரிய இந்த வெற்றிக் கூட்டணிக்கு வெற்றியை தமிழர்கள் தந்திருக்கிறார்கள். குறிப்பாக வன்னிய பேரினம் வட தமிழ்நாட்டில் வெற்றியை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்கிறோம். இனி பாமக தமிழ்நாட்டு அரசியலில் ஜொலிக்க வாய்ப்பில்லை என்பது எனது கருத்து.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்: தமிழகம் முழுவதும் வெற்றி வாகை சூடியிருக்கக்கூடிய திமுக கூட்டணிக்கு முக்கிய தலைவராக, இத்தனை வெற்றிக்கும் காரணமாக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தோம். தமிழகத்தில் ஆட்சி  நடத்துபவர்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இவ்வளவு பெரிய மகத்தான வெற்றியை தந்து உணர்வுப்பூர்வமான  உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக்  கொள்கிறேன்.முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்: இப்போது இருக்கிற எடப்பாடி அரசு முட்டுக்கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் நாங்கள் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை காண்பிப்பது போல அவர்கள் பேட்டி அளித்து வருகின்றனர். உடனடியாக எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளை பார்த்தால், எல்லா தொகுதிகளிலும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போயிருக்கிறார்கள். இந்த காரணத்தால் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த அரசு ஒரு செயலற்ற அரசு. ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் டம்மி பீஸ்கள். அவர்கள் தமிழ்நாட்டின் தலைமை பதவியில் இருந்து உடனடியாக பதவி விலகி மக்கள் உணர்வுகளுக்கு ஏற்ப தேர்தலை சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: