×

பா.ஜ வெற்றிக்கான காரணங்கள்: 300 இடங்களுக்கு மேல் வென்றது எப்படி?

புதுடெல்லி: இந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தே.ஜ கூட்டணி கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இதற்கான சில காரணங்கள் இதோ:  
* பா.ஜ ஆட்சியை வீழ்த்த எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டன. ஆனால் தங்கள் வியூகங்களை சரியாக செயல்படுத்தவில்லை. ஈகோ, சுயநல ஆதாயம் போன்றவற்றால் எதிர்கட்சிகள் தங்கள் வியூகங்களை சரியாக செயல்படுத்தவில்லை. உத்தரப் பிரதேசத்தில் சுயநல ஆதாயத்துக்காக கூட்டு சேர்ந்த சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்க்காமல் கழற்றிவிட்டன. இங்கு எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்திருந்து பா.ஜ எதிர்கொண்டிருந்தால் பா.ஜ.வின் வெற்றியை குறைத்திருக்க முடியும்.
 
* பிரதமர் வேட்பாளர் என யாரையும் எதிர்கட்சிகள் முன்னிறுத்தவில்லை. சில கட்சி தலைவர்கள் பிரதமர் பதவிக்கு ராகுலை பரிந்துரைந்ததற்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். யார் பிரதமர் என்பதில் ஒருமித்த முடிவுக்கு வராத கட்சிகளுக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்காளர்கள் நினைத்துள்ளனர். .
 
* கடந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று பா.ஜ.வை வீழ்த்தியது. இது மக்களவை தேர்தலுக்கு முன்னனோட்டமாக கருதப்பட்டது. ஆனால் 5 மாத இடைவெளியில் அதே மாநிலங்களில் நடந்த மக்களவை தேர்தலில் மீண்டும் பா.ஜ.வுக்கு வெற்றி கிடைத்தது பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.  

மாநிலத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும், மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் தெளிவாக புரிந்துதான் வாக்களித்துள்ளனர் என்பதை இதன் மூலம் நன்கு அறிய முடிகிறது. ஸ்மார்ட் போன், சமூக இணையதளங்கள் வளர்ச்சியால் அரசியல் விழிப்புணர்வு மக்களிடையே நிச்சயம் அதிகரித்துள்ளது.

* ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், தொழில் அதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை இணைத்து பிரதமர் மோடி முறைகேட்டில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்டது. இதுவும் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. இந்த விஷயத்தில் ‘நாட்டின் காவலாளி திருடன்’ என பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்ததும் மக்கள் இடையே வெறுப்பைதான் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நாட்டின் பிரதமரை, அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட உலக தலைவர்கள் போற்றும் பிரதமர் மோடியை, திருடன் என ராகுல் இழிவுபடுத்தியது மாபெரும் தவறு. பிரதமர் மோடி நான் மிகவும் நேசிக்கிறேன் என நாடாளுமன்றத்தில் ராகுல் கட்டித் தழுவுவது, பின்னர் பொதுக் கூட்டங்களில் பேட்டிகளிலும் தரம் தாழ்ந்து விமர்சிப்பது போன்ற போலி செயல்பாடுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
 
* தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விஷயத்தில் முந்தைய அரசுகளைவிட, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ அரசு எடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக், பாகிஸ்தானின் பாலகோட் தீவிரவாத முகாம் மீது விமானப்படை தாக்குதல் போன்ற துணிச்சலான முடிவுகள் மக்கள் இடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்தல் பா.ஜ பெற்ற வெற்றி மூலம் உறுதியாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில், சந்தேககங்களை எழுப்பிய எதிர்கட்சிகள் மக்களின் வெறுப்பைத்தான் சந்தித்துள்ளன. ரபேல் விமானங்கள் சரியான நேரத்தில் வாங்கப்பட்டிருந்தால், நிலைமை வேறு  மாதிரியாக இருந்திருக்கும் என பிரதமர் மோடி கூறியதும், அவர் மீது சுமத்திய  குற்றச்சாட்டுகள் தவிடு பொடியாகிவிட்டது.

* வளர்ச்சி இல்லாத வடகிழக்கு மாநிலங்களில், மோடி அரசு ஏற்படுத்திய வளர்ச்சி திட்டங்கள், இந்த தேர்தலில் பா.ஜ வெற்றிக்கு சிறந்த பலனை கொடுத்துள்ளன. மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் வன்முறையை சந்தித்தும், பா.ஜ தொண்டர்கள் தீவிரமாக கட்சி பணியாற்றி 18 தொகுதிகளில் வெற்றி கொடி நாட்டியது, மம்தா பானர்ஜி அதிர்ச்சியடைய வைத்தது.
 
* பா.ஜ அரசின் பணமதிப்பிழிப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமல்படுத்தியது மக்களுக்கு சில சிரமங்களை ஏற்படுத்தினாலும், அதன் பின் விளைவுகளால் ஏற்பட்ட சில பலன்கள், அந்த கஷ்டங்களை மறக்கடிக்கச் செய்தன. பணமதிப்பிழப்புக்கு பின்புதான் மக்களின் டிஜிட்டல் பணி பரிமாற்ற பழக்கமும் அதிகரித்தது. சாதாரண மக்கள் கூட, பணத்தை செலுத்த ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்துவது அதிகரித்தது. வணிக நிறுவனங்களுக்கும் இந்த டிஜிட்டல் பணபரிமாற்றம், நோட்டுக்களை எண்ணும் பணியை வெகுவாக குறைத்தது. ஆரம்பத்தில் சிரமமாக கருதப்பட்ட இந்த விஷயமும், மக்களுக்கு எளிதாக தொடங்கியது.

* மோடி அரசின் நலத்திட்டங்கள், அனைத்துதரப்பு மக்களையும் சென்றடையும் பொருட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள், மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே நடத்தப்பட்டன. தேர்தல் தேதி அறிவிக்கும் முன், கிட்டதிட்ட 30 நாட்களுக்கு மேலாக பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கவே அரசு சார்பில் பெரும் விளம்பரம் செய்யப்பட்டது. இதுவும் தேர்தல் வெற்றிக்கு ஒரு காரணமாக சொல்லலாம்.

* காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் திட்டம் ஏழை மக்களிடம் வரவேற்பை பெற்றாலும், நடுத்தர மற்றும் வரிசெலுத்துவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது, பாஜ கட்சிக்கு சாதகமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.
 
* தேசிய பாதுகாப்பு சட்டம் வாபஸ், ஜம்மு காஷ்மீர் விவகாரம் போன்ற விவகாரங்களில், காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை வேறாக இருந்ததால், அது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. கட்சிக்குள்ளும் 2ம் கட்ட தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளும் அறிக்கைகளும் பிரச்னையை ஏற்படுத்தின. குறிப்பாக சீக்கியர் விவகாரம், மோடியின் தனிப்பட்ட விமர்சனங்கள், பாஜவுக்கு சாதகமாக அமைந்தன.

*  வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக  தொடரப்பட்ட வழக்குகள், சந்தேகங்கள், அதற்கு தேர்தல் ஆணையத்தின் பதில், நீதிமன்ற உத்தரவுகள் போன்றவை எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தின. பெரும்பாலும் தோல்வியடையும் கட்சிகளை இந்த குற்றச்சாட்டை அதிகமாக முன்வைத்தன.  தேர்தல் நேரத்தில் இதுபோன்ற பிரச்னைகளை கிளப்பியதால் அவை அவர்களுக்கு சாதகமாக மாறவில்லை.

இந்த விசயத்தில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பலமான பின்னடைவை சந்தித்தனர். மக்களை நேரடியாக பாதிக்கும் விஷயங்கள் தொடர்பாக பிரச்னை எழுப்பாமல், வெற்று பிரச்னைகளை எதிர்கட்சிகள் பெரிது படுத்தியதும் மக்கள் இடையே வெறுப்பைதான் ஏற்படுத்தின.
 
* நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் அமளி ஏற்படுத்தி எதிர்கட்சிகள் முடக்கியதையும் மக்கள் மறக்கவில்லை. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் செய்த கோமாளித்தனங்களை, சொந்த மாநில மக்களே விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.  எதிர்கட்சிகளின் இடையூறுகளால், ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் முக்கியமான விவாதங்கள் நடப்பதில்லை. இதனால் முக்கிய மசோதாககள் பல நிறைவேறாமல் மாநிலங்களவையில் முடங்கி கிடக்கின்றன. எதிர்கட்சிகளின் இந்த நடவடிக்கையும், பா.ஜ.வுக்கு சாதகமாக அமைந்து விட்டது.
 
* கூட்டணி ஆட்சியில் எதுவும் சாதிக்க முடியாது என்று நினைத்துதான் மக்கள் சிந்தாமல் சிதறாமல் பாஜவிற்கு மீண்டும் பெரும்பான்மை கிடைக்கும் அளவிற்கு வாக்களித்துள்ளனர். நிலையான ஆட்சி வேண்டும். வலிமையான தலைவரால் மட்டுமே அதை தரமுடியும் என்று நம்பி மக்கள் மோடிக்கு வாக்களித்துள்ளனர். குறிப்பாக வடமாநில மக்கள், அதிக நம்பிக்கையுடன் பாஜவுக்கு வாக்களித்தால், மீண்டும் பாஜ வெற்றியை பெற்றுள்ளது.

வெளிநாட்டு பயண சர்ச்சை:
பிரதமர் மோடி மீது சுமத்திய மற்றொரு குற்றச்சாட்டு, வெளிநாட்டு பயணங்கள் அதிகம் மேற்கொள்கிறார் என்பது. இதுவும் மக்களிடம் எடுபடவில்லை. பிரதமர் மோடி குடும்பம் அற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் வெளிநாடு சென்றால், சுற்றுாத்தலங்களுக்கு செல்வதில்லை, சர்வதே கூட்டங்கள், வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வது, அங்குள்ள வெளிநாட்டினரையும், இந்தியர்களையும் சந்தித்து பேசி, அன்னிய முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக பேசுவதற்காகத்தான் என்பதையும் மக்கள் அறிந்துள்ளனர். இதனால் மோடி இந்தியாவில் இருப்பதில்லை, வெளிநாடு சுற்றுகிறார் என்ற பொய் பிரசாரமும் மக்களிடம் எடுபடவில்லை.


Tags : BJP ,Places , What are the reasons for the success of BJP, over 300, and how?
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு