அரவக்குறிச்சி தொகுதியில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்’ அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எப்போது ராஜினாமா செய்வார்? செந்தில்பாலாஜி கேள்வி

கரூர்: அரவக்குறிச்சி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்வதாக சவால்விட்டார். நான் வெற்றி பெற்றுவிட்டேன். அவர் எப்போது ராஜினாமா செய்யப்போகிறார்’’ என்று செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி. தம்பிதுரை மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இடையே கடும் மோதல் இருந்து வந்தது. ஆளுங்கட்சி என்பதால் செந்தில்பாலாஜிக்கு 2 பேரும் பல்வேறு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

சமீபத்தில், போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுகூட்டம் ஒன்றில் பேசுகையில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியிலோ அல்லது கரூர் நாடாளுமன்ற தொகுதியிலோ செந்தில்பாலாஜி போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்குகளுக்கு அதிகமாக பெற்றால் ஆட்சியில் இருந்தும் பதவியில் இருந்தும் விலக தயார்’’ என்று சவால் விட்டிருந்தார்.

இந்தநிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி, அதிமுக  வேட்பாளர் செந்தில்நாதனைவிட 37,814 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் சென்னை தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார். சென்னைக்கு செல்லும்  முன், அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக தயாரா என்று கேள்வி கேட்டார். இதுதொடர்பாக, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

 

ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள மமதையில் என்னென்னவோ என்னை அவதூறு பேசினர். செந்தில்பாலாஜி  (நான்) 50 ஆயிரம் வாக்குகளோ அல்லது வெற்றியோ பெற்றால் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் பேசினார்.

நான் வெற்றி பெற்றுவிட்டேன். அவர் எப்போது  ராஜினாமா செய்ய போகிறார் என்பதை நீங்களே(பத்திரிகையாளர்களை) கேட்டு சொல்லுங்கள். கரூரில் அவர் ராஜினாமா செய்த பின்னர் எப்போது தேர்தல் நடந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும். தி.மு.க. தலைவர் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவேன். இவ்வாறு செந்தில்பாலாஜி கூறினார்.

Related Stories: