×

திருச்சி விமான விபத்து விவகாரம் லைசென்ஸ் கேட்டு பைலட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விமான போக்குவரத்து துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்தாண்டு அக்டோபர் 12ம் தேதி 136 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் துபாய்க்கு புறப்பட்டது. அப்போது விமானம் ஓடுதளத்தில் இருந்த சிக்னல் ஆண்டனா, விமான நிலைய சுற்றுச்சுவர் ஆகியவற்றை சேதப்படுத்தியவாறு உயரே பறந்தது. இதில் விமானத்தின் அடிப்பாகம் சேதம் அடைந்தது.

ஆனால் விமானம் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய சம்பவம் பைலட்டுக்கு தெரியாத நிலையில், அந்த விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டு பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, சென்னை மயிலாப்பூரை சேர்ந்த டி.கணேஷ்பாபுவின் பைலட் உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ரத்து செய்து, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி டி.கணேஷ்பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், மிக குறைந்த வயதில் நான் விமான போக்குவரத்து துறையில் கேப்டனாக நியமிக்கப்பட்டேன். எனது பணிக்காலத்தில் இதற்கு முன்பாக எந்தவொரு குற்றச்சாட்டோ, கவனக்குறைவான சம்பவங்களோ நிகழ்ந்தது இல்லை. நான் இதுவரை 4,270 மணி நேரம் விமானத்தை பாதுகாப்பாக இயக்கியுள்ளேன்.

கடந்த 12.10.18 அன்று இருக்கையில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகவே விமானம் சுற்றுச்சுவரை சேதப்படுத்தியவாறு மேலே பறந்தது. இதில் மனித தவறு எதுவும் இல்லை. இதனால் நானும் பத்திரமாக விமானத்தை இயக்கினேன். அதன்பிறகு என்னை தொடர்புகொண்டு விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்து மும்பையில் தரையிறக்க உத்தரவிட்டனர். நானும் பத்திரமாக தரையிறக்கியதால்தான் நான் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம்.

ஆனால், இந்த சம்பவத்தை, விபத்தாக கருதி எனது உரிமத்தை அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு ரத்து செய்துள்ளனர். இது சட்டவிரோதமானது. எனவே என் மீது எடுக்கப்பட்டுள்ள துறை ரீதியிலான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். எனக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.ஹாஜா முகைதீன் கிஸ்தி ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக புதுடெல்லி விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் ஏர் இந்தியா நிர்வாகம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 10க்கு தள்ளிவைத்தார்.

Tags : hearing ,Pilot High Court ,Trichy ,Department of Aviation , Trichy, Air Accident, Affair, License, Pilot Case
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...