உச்ச நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: முழு எண்ணிக்கையை முதல் முறையாக எட்டியது

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் நேற்று பதவியேற்றனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31. இதில் தலைமை நீதிபதி உட்பட 27 நீதிபதிகள் பணியாற்றி வந்தனர்.

4 பணியிடங்கள் காலியாக இருந்தது. இந்த இடங்களுக்கு ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்தா போஸ், கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பூஷண் ராமகிருஷ்ணா கவாய், இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஆகியோரை நியமிக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்தது.

இதில், நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரின் பணிமூப்பில் குளறுபடி இருப்பதை காரணம் காட்டி, வேறு பெயர்களை பரிந்துரைக்க மத்திய அரசு வலியுறுத்தியது. ஆனாலும், 2வது முறையாகவும் இந்த நீதிபதிகளின் பெயர்களையே கொலிஜியம் பரித்துரைத்தது. அப்படி செய்யும்போது, அரசு அதை கட்டாயம் ஏற்க வேண்டும். அதன்படி, கொலிஜியம் பரிந்துரைத்த 4 நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. 4 பேரை நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 22ம் தேதி ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து, 4 நீதிபதிகளும் நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தில் 27 ஆக இருந்த மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை கடந்த 2008ம் ஆண்டு 31 ஆக அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு 31 நீதிபதிகள் பணியிடமும் நிரப்பப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

Related Stories: