×

சர்ச்சைக்குரிய கொல்கத்தா மாஜி கமிஷனர் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு

புதுடெல்லி: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் வழங்கப்பட்ட 7 நாள் சட்ட பாதுகாப்பை நீட்டிக்கக் கோரி கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் எந்த நேரத்திலும் அவரை சிபிஐ கைது செய்யலாம்.
மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயன்றதாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார் மீது சிபிஐ குற்றச்சாட்டு சுமத்தியது. இதுதொடர்பாக, அவரை கைது செய்து விசாரிக்க நடவடிக்கை எடுத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜிவ் குமாருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை நீக்கிய உச்ச நீதிமன்றம், 7 நாட்களுக்குள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.

ஆனால், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஸ்டிரைக் நடப்பதால் சட்ட பாதுகாப்பை நீட்டிக்கக் கோரி விடுமுறைக்கால அமர்வு முன்பு ராஜிவ் குமார் தரப்பில் கடந்த 20ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி உத்தரவிட்டிருப்பதால் அவசரகால மனுவாக விசாரிக்க விடுமுறைகால அமர்வு விசாரிக்க மறுத்தது.

இந்நிலையில் சட்ட பாதுகாப்பை நீட்டிக்கக் கோரி ராஜிவ் குமார் தரப்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தலைமையிலான விடுமுறைக்கால அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ‘‘இந்த மனு தவறுதலாக பட்டியலிடப்பட்டு உள்ளது. இதில் ஏற்கனவே தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நீங்கள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு சென்று அங்கு முறையிடுங்கள் என ஏற்கனவே நாங்களும் அறிவுறுத்தி உள்ளோம்,’’ என்றார்.

அதற்கு ராஜிவ் குமாரின் வக்கீல், ‘‘கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஸ்டிரைக் நடக்கிறது’’ என்றார். அதற்கு நீதிபதிகள், ‘‘நீங்கள் கூறுவது தவறு. அங்கு நீதிமன்றம் செயல்படுகிறது. நீதிபதிகள் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களின் கட்சிக்காரர் போலீஸ் உயர் அதிகாரி. இளம் வக்கீல்களைக் காட்டிலும் அவருக்கு சட்டம் நன்கு தெரியும். அவரே தனிப்பட்ட முறையில் கூட கொல்கத்தா நீதிமன்றத்தை அணுகலாமே?’’ என்றனர்.

இதற்கு வக்கீல், ‘‘இன்றுடன் சட்ட பாதுகாப்பு முடிவதால் அதை நீட்டிக்க வேண்டும்’’ என்றார். இதை நிராகரித்த நீதிபதிகள்,  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால்,  ராஜிவ்குமாரின் 7 நாள் சட்ட பாதுகாப்பு நேற்றுடன் முடிந்து விட்டதால், அவரை சிபிஐ எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Commissioner ,Calcutta Magazine ,Supreme Court , Calcutta, magic commissioner, bail, opportunity, supreme court, thriller
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...