×

கற்றல் குறைபாடு தடையாக இருக்கக்கூடாது 90 சதவீத பார்வை குறைபாடு உள்ள மாணவருக்கு எம்பிபிஎஸ் சீட்

மதுரை:  நெல்லை மாவட்டம், தென்காசி மேலகரத்தை சேர்ந்தவர் ஜெ.விபின். இவருக்கு 75 சதவீத பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி என அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது. இவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில், அகில இந்திய அளவில் 285வது இடம் பெற்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனை கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது. கல்லூரியில் சேர சென்றபோது, சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு குழு முன்பு ஆஜராகி சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்குமாறு விபினுக்கு உத்தரவிட்டது. மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு குழு விபினை பரிசோதித்து, அவர் 90 சதவீத பார்வை திறன் குறைபாடு உள்ளவர் என சான்றிதழ் வழங்கியது. பின்னர் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, 40 சதவீதத்துக்கு மேல் பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவ சீட் வழங்க முடியாது என்று கூறி விபினுக்கு எம்பிபிஎஸ் சீட் மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து, ஐகோர்ட் மதுரை கிளையில் விபின் மனு தாக்கல் செய்தார்.

விசாரித்த தனி நீதிபதி, ‘‘மாற்றுத்திறன் மாணவருக்கு மருத்துவ சீட் மறுப்பது மாற்றுத்திறனாளிகள் சட்டத்துக்கு எதிரானது. எனவே மனுதாரருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் சீட் வழங்க வேண்டும். அந்த சீட் நிரப்பப்பட்டிருந்தால் வேறு அரசு மருத்துவக்கல்லூரிகளில் சீட் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சுகாதாரத்துறை செயலர் சார்பில், மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, கிருஷ்ணவள்ளி ஆகியோர் விசாரித்தனர். விபின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடுகையில், ‘‘மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் 40 சதவீதத்துக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்கல்வி நிறுவனங்களில், 5 சதவீதத்துக்கும் குறையாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த விதிப்படி மனுதாரருக்கு ஏதாவது ஒரு மருத்துவக்கல்லூரியில் சீட் வழங்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

இதனையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
பார்வையற்றவர்களால் மருத்துவப்பணிகளை திறம்பட செய்ய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர் ஒய்.ஜி.பரமேஸ்வரா. இந்தியாவின் முதல் பார்வையற்ற மருத்துவரான இவர், மருத்துவத்துறையில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். பார்வை குறைபாடு உள்ள ஒருவர் சாதனைக்கு எவ்வளவு போராடியிருப்பார் என்பது தெரிகிறது. பரமேஸ்வராவிடம் இருந்து விபின் அதிகம் கற்றுக்கொள்வார். பார்வை குறைபாடை ஒரு காரணமாக சொல்லி ஒருவரின் கனவை சிதைக்க முடியாது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சீட் மறுக்கும் இந்திய மெடிக்கல் கவுன்சில் விதி பாகுபாடு உடையது. கற்றல் குறைபாடு அல்லது பிற குறைபாடுகள் மருத்துவ படிப்பில் நுழைய தடையாக இருக்கக்கூடாது. இதனால் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் அறிவிப்புகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இவ்வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முகாந்திரம் இல்லை. இந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. விபினுக்கு 2019-10ம் கல்வியாண்டில் மருத்துவ சீட் ஒதுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Learning disability, 90% vision deficiency, MBBS seat
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...