தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் அதிகம் உணவுப்பொருட்களில் 100% நிறமூட்டி கலப்பு

வேலூர்: தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் உணவுப்பொருட்களில் நூறு சதவீதத்திற்கு அதிகமாக தடை செய்யப்பட்ட நிறமூட்டிகள் கலப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இதனை ஆய்வு செய்யும் பணிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக  வீதிகள்தோறும் சிற்றுண்டிகளும், உணவகங்களும் புற்றீசல் போல் முளைத்துள்ளன. இதில் பெரும்பாலான ஓட்டல்களில் லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு உணவுப்பொருட்களில் கலப்படம் தரமற்ற உணவு வகைகள் சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதில் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், சில்லி சிக்கன், கிரில் சிக்கன் போன்றவற்றில் அதிகளவில் தடைசெய்யப்பட்ட நிறமூட்டிகள் கலக்கப்படுகிறது. பிரியாணியில் 3 வகையான நிறமூட்டிகளும், சால்னாவிலும் தடைசெய்யப்பட்ட நிறமூட்டிகள் கலந்து தயாரிக்கப்படுவதாக புகார்கள் உள்ளது. இதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். உடலுக்கு கேடு விளைவிக்கும் நிறமூட்டிகள் உணவில் அதிகளவில் கலக்கப்படுவதை தடுப்பதற்காக வேலூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து வகையான ஓட்டல்களில் இருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில்தான் அதிகளவில் உணவுப்பொருட்களில் நிறமூட்டிகள் கலக்கப்படுகிறது. இந்த நிறமூட்டிகளால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஸ்வீட், சாக்லேட், ஜெல்லி, ஐஸ்கிரீம், ஜூஸ் ஆகியவற்றிற்கு மட்டும் 1 கிலோவுக்கு, 1 மில்லிகிராம் நிறமூட்டி கலந்துகொள்ள அனுமதி உண்டு. அளவுக்கதிகமாக நிறமூட்டுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை 15 ஓட்டல்களில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் முடிவு தெரிந்தால் சம்பந்தப்பட்ட ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வாட்ஸ்அப் எண்ணில் புகார்

தமிழகத்தில் உணவுப்பொருட்களில் கலப்படம் இருந்தால் உடனே பொதுமக்கள் இருந்த இடத்தில் இருந்தே வாட்ஸ் அப் எண் 94440 42322 என்ற எண்ணில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்ைக எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த எண்ணை பயன்படுத்தி புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: