குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61வது பழக்கண்காட்சி இன்று முதல் துவக்கம்

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61வது பழக்கண்காட்சி இன்று துவங்குகிறது. இரண்டு நாள் நடக்கும் கண்காட்சிக்கென 1.5 டன் பழங்களில் சிறப்பு உருவங்கள் போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடக்கிறது. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் காரணமாக கோடை விழாவில் காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி,ரோஜா கண்காட்சி, படகு போட்டி போன்றவற்றை ரத்து செய்யப்பட்டன. எனினும் ஊட்டி மலர் கண்காட்சி மற்றும் குன்னூர் பழக் கண்காட்சி ஆகிய இரண்டை மட்டும் நடத்த  மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.  கடந்த 17ம் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கி 5 நாள் நடந்தது.  மலர் கண்காட்சியை சுமார் 1.50 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுரசித்தனர். இந்நிலையில்   குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61வது பழக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த கண்காட்சியை நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைக்கிறார். பழக் கண்காட்சியை முன்னிட்டு 3 மாதங்களுக்கு முன்பே பல லட்சம் மலர்ச் செடிகள்  தொட்டிகளில் நடவு செய்யப்பட்டன.

தற்போது பல வண்ணங்களில் சிம்ஸ் பூங்கா முழுக்க  மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. கண்காட்சியில் பழங்களை கொண்டு வண்ணத்துப்பூச்சி, மயில், மாட்டுவண்டி மற்றும் விவசாய தம்பதி உருவம் போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக பழங்களை குண்டூசி, இரும்பு கம்பி பயன்படுத்தி இணைத்து மாதிரி வடிவங்களை உருவாக்குவது வழக்கம். இதனால்  பழங்கள் அதிகளவில் வீணாவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனை ஏற்றுகொண்ட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் இந்த ஆண்டு பழக்கண்காட்சியில் பழங்கள் சேதமடையாமல் வடிவமைக்க முடிவு செய்துள்ளனர். மேலும் கண்காட்சி நிறைவடைந்ததும் பழங்களை கொண்டு ஜாம்,ஜெல்லி போன்றவைகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைதுறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: