தமிழக இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 22 எம்எல்ஏக்கள் அடுத்த வாரம் பதவியேற்பு

சென்னை: தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 22 பேர் அடுத்தவாரம் எம்எல்ஏக்களாக பதவியேற்கிறார்கள். தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், திருவாரூர், குடியாத்தம், ஆம்பூர், தஞ்சாவூர், ஓசூர், அரவக்குறிச்சி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 13 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

சூலூர், பாப்பிரெட்டிப்பட்டி, நிலக்கோட்டை, பரமக்குடி, விளாத்திகுளம், சோளிங்கர், மானாமதுரை, அரூர், சாத்தூர் ஆகிய 9 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். திமுக, அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 22 பேரும் அடுத்த வாரம் திங்கட்கிழமைக்கு மேல் சென்னை, தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் பதவியேற்றுக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நடந்து முடிந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் விவரங்கள் முறைப்படி தேர்தல் ஆணையம் மூலம் தமிழக சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த கடிதம் இன்று வர வாய்ப்புள்ளது. இதையடுத்து, வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் தங்கள் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் பதவியேற்றுக்கொள்ளலாம்” என்றார்.

Related Stories: