மக்களவை தேர்தல் முடிவு எதிரொலி 38 தொகுதிகளில் போட்டியிட்ட டிடிவி கூட்டணிக்கு கிடைத்தது வெறும் 21.80 லட்சம் வாக்குகள்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் டிடிவி.தினகரன் தலைமையிலான கூட்டணி கட்சிக்கு 21.80 லட்சம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. பல இடங்களில் நோட்டாவுக்கு கீழ் சென்றதால் அதிமுகவில் இருந்து வந்த அவரது ஆதரவாளர்கள் தற்போது பெரும் கலக்கத்தில உள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். பின்னர் டிடிவி.தினகரன் கை அதிமுகவில் ஓங்கியது. ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் டிடிவி.தினகரன் போட்டியிட்டார். அப்போது வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுக்கப்பட்டதால் இந்திய தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிரடியாக ரத்து செய்தது. பின்னர் டிடிவி.தினகரன் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்டார்.பின்னர் தனி அணியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் சில நிபந்தனைகளுடன் எடப்பாடி அணியில் மீண்டும் இணைந்தார். அதைதொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த மதுசூதனன், டிடிவி.தினகரனுக்கு எதிராக அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டார். ஆனால் டிடிவி.தினகரன் சுயேச்சையாக வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் தோல்வி அடைந்தார்.

அதைதொடர்ந்து அதிமுகவில் இருந்த 18 எம்எல்ஏக்கள் டிடிவி.தினகரன் அணிக்கு சென்றனர். பின்னர் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறிவந்த டிடிவி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று தனி அமைப்பை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் டிடிவி.தினகரன் தனது அமமுக அமைப்பை தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்தார். அதன்பிறகு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த எம்பி தேர்தலில் டிடிவி.தினகரன் எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி அமைத்து 38 இடங்களில் போட்டியிட்டார். இதில் மத்திய சென்னையை கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கிவிட்டு மற்ற 37 இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் டிடிவி.தினகரன் அணியினர் வாக்காளர்களுக்கு பல இடங்களில் பணம் கொடுத்ததாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர். மேலும், அமமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிட்ட தேனி தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ1கோடிக்கு மேலான பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் துப்பாக்கி சூடு நடத்தி பறிமுதல் ெசய்தனர்.

மக்களவை தேர்தலில் உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று அமமுகவினர் மாநிலம் முழுவதும் டிடிவி.தினகரன் மூலம் தீவிர தேர்தல் பரப்புரை செய்தனர். இதனால் பல இடங்களில் அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதினர். ஆனால், மக்களவை தேர்தல் முடிவில் டிடிவி.தினகரன் அணி யாரும் எதிர்பார்க்காத நிலையில் படுதோல்வியடைந்து கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டிடிவி.தினகரன் கூட்டணி கட்சியினர் நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் மொத்தம் 21,80,485 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர். தேர்தலுக்கு முன்பு டிடிவி.தினகரன், அமமுக கட்சிக்கு தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர் என்று பலமுறை தெரிவித்துள்ளார்.  ஆனால் தேர்தல் முடிவுகளால் டிடிவி.தினகரனுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமமுக, கிருஷ்ணகிரி தொகுதியில் நோட்டாவுக்கு கீழ் மிகவும் குறைந்த அளவாக 8,850 வாக்குகள் பெற்றுள்ளது. அதிகபட்சமாக தேனி தொகுதியில் தங்கதமிழ்ச்செல்வன் 1,43,173 வாக்குகள் பெற்றுள்ளார். இதனால் அதிமுகவில் இருந்து டிடிவி.தினகரன் உடன் வந்த 18 எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தற்போது கடும் அதிருப்தியில் உள்ளனர். டிடிவி கட்சிக்கு நல்ல எதிர்காலம் இல்லாததால் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories: