இன்று எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி தேர்வு அமைச்சர்கள் பட்டியல் தயார்

* அமித்ஷா, ஸ்மிருதிக்கு முக்கிய இலாகா

* புதியவர்களுக்கு அதிக வாய்ப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜ, ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. இதில், பிரதமராக மோடி முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார்.  வரும் 30ம் தேதி அவர் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை அமைச்சரவையில் பல்வேறு புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், அமித் ஷா, ஸ்மிருதி இரானிக்கு முக்கிய இலாகா வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜ 302 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஒரு தொகுதியில் மட்டும் இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.

இத்தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் கடும் தோல்வியை சந்தித்தன. மாநில கட்சிகளில் அதிகபட்சமாக திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்த்த வெற்றியை பெறத் தவறின. தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, புதிய ஆட்சியை அமைப்பதற்கான வழக்கமான நடைமுறைகளை தொடங்கி உள்ளது. தற்போதைய அரசின் பதவிக்காலம் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும். இதற்காக, பாஜ எம்பி.க்கள் கூடி தங்களின் தலைவரை முறைப்படி தேர்வு செய்வார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் புதிய தலைவர், ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான அனுமதி கோருவார். இதற்காக, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பி.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடக்க உள்ளது. இதில், புதிய பிரதமராக மோடி முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார். இதேபோல், ஜனாதிபதியை சந்தித்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பி.க்களின் பட்டியல் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரப்பட உள்ளது. இந்த நடைமுறைகள் அடுத்தடுத்த நாட்களில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. பிரதமர் மோடி வரும் 30ம் தேதி பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பதவியேற்பதற்கு முன்பாக அவர் தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். அதற்காக பிரமாண்ட பேரணிக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தனது தாயை சந்தித்து ஆசி பெற்ற பின், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க திட்டமிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

இதில், யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்பதற்கான ஆலோசனையும் பாஜ தரப்பில் மும்முரமாக நடந்து வருகிறது. மோடிக்கு நெருக்கமானவரும், பாஜ தேசிய தலைவருமான அமித் ஷா இம்முறை அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு உள்துறை, நிதி, வெளியுறவுத் துறை அல்லது பாதுகாப்பு ஆகிய 4 முக்கிய துறைகளில் ஏதேனும் ஒன்று வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இருவரும் உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வருவதால், புதிய அமைச்சரவையில் இடம் பெறுவார்களா என்பது உறுதியாக தெரியவில்லை. தற்போது பாதுகாப்பு அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் புதிய ஆட்சியிலும் அதே பதவியில் தொடர விருப்பம் தெரிவித்துள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுலை வென்று அதிர்ச்சி அளித்துள்ள ஸ்மிருதி இரானிக்கு பாஜ சிறந்த பரிசாக முக்கிய இலாகாவை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், ஏற்கனவே அமைச்சர்களாக பதவி வகித்த ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ரவி சங்கர் பிரசாத், பியூஸ் கோயல், நரேந்திர  சிங் தோமர், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டணி கட்சிகளான சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் தர ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேற்கு வங்கம், ஒடிசா, தெலங்கானாவில் சிறப்பாக செயல்பட்டு கட்சிக்கு வெற்றி தேடித்தந்த எம்பி.க்களுக்கும் அமைச்சரவையில் இடம் தரப்படலாம். இதனால் நிறைய புதிய முகங்களும் மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன. நேரு, இந்திரா காந்திக்குப் பிறகு தொடர்ந்து 2வது முறையாக தனிப் பெரும்பான்மை வெற்றியுடன் பிரதமர் மோடி பதவியேற்க உள்ளார். இதனால், பதவியேற்பு விழாவை மிக பிரமாண்டமாக நடத்தவும் பாஜ திட்டமிட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கான நடைமுறைகள் தொடங்கி இருப்பதைத் தொடர்ந்து, பாஜ தலைமையகம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டுள்ளது.

Related Stories: