ஆழ்வார்குறிச்சி அருகே பொத்தையில் திடீர் தீ

கடையம்: ஆழ்வார்குறிச்சி அருகே முள்ளிமலை பொத்தையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்ததில் புல், சிறு செடிகள் எரிந்து சாம்பலாகின. ஆழ்வார்குறிச்சியிலிருந்து கடனாநதி செல்லும் வழியில் செட்டிகுளம் அருகே முள்ளிமலைப் பொத்தை உள்ளது. சமூக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பொத்தையில் கோரை புற்கள், நாட்டு கருவேலமரங்கள், வேம்பு, தேக்கு உள்ளிட்ட மரங்கள் உள்ளன. மேலும் இந்தப் பொத்தையில் காட்டுப் பன்றிகள், மிளா, முயல் உள்ளிட்ட விலங்குகளும் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை பொத்தையின் வடபுறத்தில் உள்ள மந்தியூர் காலனிப் பகுதியில் கோரைப்புற்களில் திடீரென தீப்பிடித்ததாம். கோரைப்புற்கள் நன்கு காய்ந்த நிலையில் இருந்ததால் லேசாக வீசிய காற்றில் கூட வேகமாகப் பரவியது.

இது குறித்துத் தகவலறிந்ததும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் ஓம்காரம் கொம்மு உத்தரவின் பேரில் கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம் ஆலோசனையில் வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டைத்தடுப்புக் காவலர்கள் அடங்கியக் குழுவினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பொத்தையில் உள்ள புற்கள், சிறு செடிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. மேலும் காட்டுப்பன்றிகள், மிளா உள்ளிட்ட விலங்குகள் பொத்தையின் மறுபுறம் சென்று தப்பின. மழையில்லாமல் கடும் வெயிலால் வெப்பம் நிலவியதால் புற்கள் தீப்பிடித்திருக்கும். மேலும் மழை பெய்யும்போது மீண்டும் புற்கள் முளைத்துவிடும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த ஆண்டு கோடையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் 4வது முறையாக தீ விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: