×

சாமிதோப்பில் வைகாசி திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென்தாமரைக்குளம்: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா இன்று காலை (24ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், தொடர்ந்து திரு நடைதிறந்து திருவிளக்கு ஏற்றுதல், காலை 6 மணிக்கு பணிவிடை, கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி, 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடந்தது. அய்யா வழி பக்தர்களின் ‘அய்யா சிவசிவா... அரகரா அரகரா...’ என்ற பக்தி கோஷம் முழங்க பாலபிரஜாபதி அடிகளார் திருக்கொடி ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து வாகன பவனி, நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடந்தது. நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, இரவு வாகன பவனி, அன்னதர்மம் நடக்கிறது.

வரும் 31ம் தேதி வெள்ளிக்கிழமை 8ம் திருவிழாவில் மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளைக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடுதல், தொடர்ந்து சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தல், இரவு 11 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி, அன்னதர்மம் நடக்கிறது. 9வது நாள் விழாவில் இரவு அனுமன் வாகன பவனி, 10ம் நாள் விழாவில் இரவு இந்திர வாகன பவனி, 11ம் நாள் நிறைவு திருவிழாவில் நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

Tags : festival festival , May festival
× RELATED அந்தியூர் குருநாதசாமி கோயில் ஆடி தேர்...