மானாமதுரை அரசு பள்ளியில் மந்த கதியில் நடக்கும் கூடுதல் வகுப்பறை கட்டிடப் பணி

மானாமதுரை: மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளி திறக்க சில  நாட்களே உள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.  சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள முக்கிய பள்ளியாகும். இப்பள்ளியில் மானாமதுரையை சுற்றியுள்ள 300க்கு மேற்பட்ட கிராமங்களிலிருந்து 1800க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். ஆறு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கும் இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஏற்ப வகுப்பறைகளும், விளையாட்டு மைதானம் போதுமானதாக இல்லை.

வசதிகள் இல்லாவிட்டாலும் மாநில, மாவட்ட அளவில் விளையாட்டிலும், படிப்பிலும் சாதனைபடைக்கும் பள்ளியாகும். தொடர்ந்து மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில் படிக்கும் மாணவிகளுக்கு இடவசதியில்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இப்பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள், தலைமை ஆசிரியை சகிதா ஆகியோர் முயற்சியால் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.3 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் 18 வகுப்பறை கட்டிடங்கள், 2 ஆய்வகங்கள், 4 கழிப்பறைகள் என கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. கட்டுமான பணிகள் துவங்கிய நாள் முதல் ஆமைவேகத்தில் பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணிகள் 8 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் முழுமையாக பணிகள் நிறைவு பெறவில்லை.

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்த கட்டுமான பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,‘‘ 1800க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லை. பழைய வகுப்பறைகளில் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. இடப்பற்றாக்குறையை தீர்க்க தற்போது இந்த புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால் வரும் கல்வி ஆண்டிலும் இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் பெரிதும் சிரமம் அடையும் நிலை ஏற்படும். இட நெருக்கடி காரணமாக மாணவிகள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தற்போது இந்த ஆண்டு மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த கட்டுமான பணிகளை விரைந்து முடித்தால் மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே மாவட்ட கலெக்டர் கூடுதல் கவனம் எடுத்து பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்த வேண்டும்’’ என்றனர்.

Related Stories: