தமிழகத்தில் குடிநீர் விற்பனையிலும் முறைகேடு விதி மீறி ஆழ்துளை கிணறுகள் அமைப்பதால் கேள்விக்குறியான நிலத்தடி நீர்மட்டம்

வேலூர்: தமிழகத்தில் தினமும் புதிதாக நூற்றுக்கணக்கில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருக்கும் ஆழ்துளை கிணறுகளின் ஆழத்தை அதிகப்படுத்த ஒரு சிலர் ராட்சத போர்வெல்களை போடுகின்றனர். இதுபோன்று ஆழ்துளை கிணறுகள் அமைப்பதில் பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:தமிழகத்தில் ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைந்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டில் ஆழ்துளை கிணறுகளை அமைப்பது மற்றும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு சட்ட வடிவமைப்பை இயற்றியுள்ளது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆழ்துளை கிணறுகள் அமைக்க அனுமதி பெற வேண்டும். விதி மீறுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால், இந்த சட்டம் தற்போது நடைமுறையில் இருக்கிறதா? என்பது அதிகாரிகளுக்கே தெரியவில்லை.

ஒரு சிலர் ராட்சத ஆழ்துளை கிணறுகளை அமைத்து தண்ணீர் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஒரு சிலர் அனுமதியின்றி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விற்பனை செய்வதாக கூறி, போலி கேன் குடிநீர் விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அதேபோல், மழைக்காலத்தில் தண்ணீர் சேமிப்பதற்காக தடுப்பணைகள் கட்டுவதில் தமிழக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. மேலும் ஆந்திராவில் புதிய அணைகள் கட்டுவது, அணைகளின் உயரத்தை அதிகரிப்பது என்று விதிமீறி செயல்படுகின்றனர். இதனால், பாலாறு வறண்டு கிடக்கிறது. அதோடு, மணல் கடத்தல் கும்பல்களால் பாலாறு தடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்திலும் அதிகாரிகள் அலட்சிய போக்கையே கடைபிடிக்கின்றனர்.

தமிழகத்தில் சுமார் 1.90 லட்சம் கிணறுகள் இருந்ததாகவும், இதில் சுமார் 1.70 லட்சத்துக்கும் அதிகமான கிணறுகள் கடந்த 15 ஆண்டுகளில் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகப்படியான போர்வெல்கள் அமைப்பதால், கிணறுகள் வறண்டு போனதே இதற்கு காரணம். மேலும் பொது கிணறுகளை பராமரிப்பதில் உள்ளாட்சி அமைப்புகள் அக்கறை காட்டவில்லை. இதனால், பெரும்பாலான கிணறுகள் குப்பைகள் கொட்டி மூடப்பட்டுள்ளது. இந்த குப்பைகளை தூர்வாரி பொதுக்கிணறுகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும் கிணறுகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அதோடு ஆழ்துளை கிணறுகள் அமைப்பதில் விதிமீறல்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அப்போதுதான் வருங்கால தலைமுறையினர் உயிர் வாழ முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விவசாயத்தில் 70 சதவீதம் தண்ணீர் பங்கு

விவசாயத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக பங்கு தண்ணீருக்குதான் இருக்கிறது. ஆனால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதால், விவசாயிகள் போர்வெல்களை அமைத்து பாசனம் செய்து வருகின்றனர். நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால், பலமுறை போர்வெல்களை இயக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், மின் சிக்கனமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதன்மூலம் விதிமீறி அமைக்கப்படும் ஆழ்துளை கிணறுகளால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது வெளிப்படையாகிறது. எனவே, ஆழ்துளை கிணறுகள் அமைப்பதில் விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories: