அதிமுகவுக்கு எதிராக காட்டிய ‘பில்டப்’ கலைந்தது தென்மாவட்டங்களில் அமமுக சறுக்கியது ஏன்? கவலையில் ஆழ்ந்த கட்சி நிர்வாகிகள்

நெல்லை: தென்மாவட்டங்களில் பெரிய சக்தியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக மக்களவை தேர்தலில் வெற்று வாணவேடிக்கையாக மாறிப்போனது. அக்கட்சியினர் தென்மாவட்டங்களில் பல தொகுதிகளில் ஒரு லட்சம் ஓட்டுக்களை கூட வாங்க முடியாமல் திண்டாடினர். மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் நேற்று நாடு முழுவதும் வெளியானது. தமிழகத்தில் திமுக கூட்டணி 39 இடங்களை கைப்பற்றி, அமோக வெற்றியை பெற்றது. தேனி தொகுதியை மட்டும் கைப்பற்றி அதிமுக ஆறுதல் அடைந்தது. தென்மாவட்டங்களில் பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஓரிரு தொகுதிகளை கூட கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஏனெனில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் அதிமுக, திமுக கட்சிகளை ஓரம் கட்டி வெற்றியை ஈட்டினார். இவ்வெற்றிக்கு பிறகு தமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு மாற்று கட்சியாக தன்னை அடையாளப்படுத்திய தினகரன், மத்தியில் ஆட்சியை அமமுக தீர்மானிக்கும் என்றெல்லாம் பில்டப் காட்டினார்.

தென்மாவட்டங்களில் சமீப காலமாக அவரது வருகை, பிரசாரம் ஆகியன அதிமுகவிற்கு சிம்ம சொப்பனமாகவே அமைந்தது. நூறு கார்கள் புடைசூழ, பெரும் கூட்டத்தை காட்டிய தினகரனின் வளர்ச்சி கண்டு அதிமுக நிர்வாகிகளுக்கும் உள்ளூர பயம் இருந்தது. இந்நிலையில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் அமமுகவை ஒரு சாதாரண கட்சியாக அடையாளப்படுத்தியது. அக்கட்சி வெற்றி பெறும் என கணிக்கப்பட்ட தேனி தொகுதியில் தங்க தமிழ்செல்வன் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ஓட்டுக்கள் வாங்கி 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே அவர் போட்டியில் இல்லை என்பது தெளிவானது. காங்கிரசிற்கும், அதிமுகவிற்குமே கடைசி வரை போட்டி காணப்பட்டது.

தமிழக அரசியலில் தன்னை 3வது பெரிய சக்தியாக தினகரன் அடையாளப்படுத்தி கொண்டாலும், அவரது கட்சி சில இடங்களில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் பெற்ற ஓட்டுக்களை விட குறைவாகவே காணப்பட்டது. அதிமுகவின் வெற்றியை தடுப்போம் என சூளுரைத்து கொண்டு களமிறங்கிய அமமுகவால் பல இடங்களில் 50 ஆயிரத்தை தாண்டி கூட வரமுடியவில்லை. அமமுகவினர் ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் மட்டுமே ஒரு லட்சத்தை தாண்ட முடிந்தது. புதுவையில் 5 ஆயிரம் ஓட்டுக்கள் கூட அமமுகவிற்கு கிடைக்கவில்லை. கன்னியாகுமரியில் 12 ஆயிரம் ஓட்டுக்களோடு அமமுக திருப்திப்பட்டு கொண்டது. தென்மாவட்டங்களில் குறிப்பிட்டத்தக்க வெற்றியை காட்ட தினகரன் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் மக்களவை தேர்தலில் எடுபடவில்லை. தீவிர மோடி எதிர்ப்பாளர் என காட்டி கொண்ட தினகரன், சிறுபான்மை ஓட்டுக்களையும், ஜாதிய ஓட்டுக்களையும் அறுவடை செய்ய திட்டமிட்டார். ஆனால் திமுகவின் எழுச்சிக்கு முன்னர், அவரது கணக்குகள் தூள் தூளானது. போட்டியிட்ட தொகுதிகளில் டெப்பாசிட் இழந்து அமமுக சோக நிலைக்கு தள்ளப்பட்டது.

தன்னை நம்பி வந்த எம்எல்ஏக்களின் பதவி பறிபோனவுடன், அவற்றை மீண்டும் கைப்பற்ற அமமுக எடுத்த முயற்சிகளும் எடுபடவில்லை. சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அமமுக எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தென்மாவட்டங்களில் பணபலத்தை அதிகமாக நம்பி களமிறங்கிய அமமுகவிற்கு, பல தொகுதிகளில் முறையாக பணபட்டுவாடா நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தேர்தலின்போது எழுந்தது. இதன் காரணமாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒருவித தொய்வு ஏற்பட்டது. புதிது, புதிதாக இளைஞர்கள் புடைசூழ, வாகன அணிவகுப்பை நடத்திய அமமுகவின் பிரமிப்பு, மக்களவை தேர்தலில் வெற்று வாண வேடிக்கையாக மாறிபோனது.

நெல்லையிலும் புஸ்வாணமானது!

நெல்லை தொகுதியில் அமமுக வேட்பாளராக களம் இறங்கிய மைக்கேல்ராயப்பன், இத்தொகுதிக்கு ஏற்கனவே பிரபலமானவர். நெல்லை தொகுதிக்கு உட்பட்ட ராதாபுரம் சட்டசபை தொகுதியில் தேமுதிக சார்பில் எம்எல்ஏவாகவும் இருந்து பணியாற்றியவர். இதன் காரணமாக அமமுக நெல்லை தொகுதியில் குறிப்பிடத்தக்க வாக்கு வாங்கியை காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வாக்கு எண்ணிக்கை முடிவில் 62 ஆயிரம் ஓட்டுக்களை மட்டுமே வாங்கி டெப்பாசிட் இழந்தார். இதனால் அந்த எதிர்பார்ப்பும் புஸ்வாணமானது. கடந்த 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் இதே தொகுதியில் தனித்து நின்ற மைக்கேல் ராயப்பன் ஒரு லட்சத்திற்கு மேலாக ஓட்டுக்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: