×

தாத்தா தேவகவுடாவிற்காக எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் பேரன்: கர்நாடக அரசியலில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகா ஹசன் தொகுதியில் வெற்றிபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஒரே எம்.பியான பிரஜ்வல் ரேவண்ணா ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். கர்நாடகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஒரு தொகுதியிலும், அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 8 தொகுதியில் போட்டியிட்டது, அக்கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா தும்கூரு தொகுதியிலும், அவரின் பேரனான பிரஜ்வால் ரேவன்னா ஹசன் தொகுதியிலும், மற்றொரு பேரனும், முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி மாண்டியா தொகுதியிலும் போட்டியிட்டனர்.

இதில் பாஜக வேட்பாளர் பசவராஜிவிடம் 13,339 வாக்குகள் வித்தியாசத்தில் தேவகவுடா தோல்வியடைத்தார். அதே போல நிகில் குமாரசாமியும் தோல்வியை தழுவினார். பிரஜ்வால் ரேவன்னா மட்டுமே வெற்றி பெற்று அக்கட்சியின் ஒரே எம்.பி ஆகியுள்ளார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரேவன்னா, எனது தாத்தாவும் தேசிய தலைவருமான தேவகவுடாவிற்கு வழிவிடும் வகையில் எனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என அறிவித்தார். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு, கட்சியோ, தேவகவுடாவோ இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும் இது உணர்ச்சி வசத்தால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல, ஆழ்ந்த சிந்தனையின் பின்னர் எடுக்கப்பட்ட முடிவாகும். மிக நெடிய அரசியல் அனுபவம் கொண்ட தேவகவுடாவின் இருப்பு பாராளுமன்றத்திற்கு தேவை என்றும் தேவகவுடா மீண்டும் ஹசன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆக வேண்டும் என விரும்புவதாக கூறினார்.

கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சரும் தேவகவுடாவின் மகனுமான ஹெச்.டி.ரேவன்னாவின் மகனான பிரஜ்வால் ரேவன்னாவின் அரசியல் நுழைவுக்காக, தான் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்த ஹசன் தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டு தும்கூர் தொகுதியில் தேவகவுடா போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.



Tags : Deva Devadavada Grandson ,resignation ,Karnataka , Grandparents, resignation, politics of Karnataka
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...