×

மக்களவை தேர்தலின் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி உள்பட பல மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜினாமா

லக்னோ: மக்களவை தேர்தலின் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி உள்பட பல மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்து வருகின்றனர். நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. அதில் 350 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 92 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரசேதத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா 62 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 5 தொகுதிகளிலும், அப்னா தளம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே காங்கிரஸ் கட்சி ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மட்டும் ரேபரேலி தொகுதியில் 1,67,178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் கோட்டை எனக் கூறப்பட்ட அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி ராணி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தினார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கிடைத்த படுதோல்விக்கு பொறுப்பேற்று, அம்மாநில காங்கிரஸ் தலைவரும் நடிகருமான ராஜ் பப்பார் மற்றும் அமேதி மாவட்ட தலைவர் யோகேந்திர மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர்.

அதேபோல் ஒடிசா காங்கிரஸ் கட்சித் தலைவர் நிரஞ்சன் பட்நாயக்கும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. தோல்விக்குப் பொறுப்பேற்று நான் எனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பிவிட்டேன். இளைஞர்களிடையே கட்சியை வளர்க்க, வலுவான அடிதளத்தை அமைக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்கும் வகையில், அம்மாநில காங்கிரஸ் பிரச்சாரக் குழுவின் தலைவர், எச்.கே.பாட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கிடையில், தேர்தல் முடிவுகளை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : state ,Congress ,party executives ,elections ,UP ,Lok Sabha , Lok Sabha election, defeat, Congress, leaders, resign
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...