பிரெக்சிட் விவகாரம்: பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் தெரசா மே..!

லண்டன் : பிரெக்சிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து ஜுன் 7-ல் தெரசா மே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரெக்சிட் விவகாரத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற ஒப்புதலை பெற முடியாததால் பதவி விலகி முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக லண்டன் நகரில் டவுனிங் தெருவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்; பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருமுறை பணியாற்ற கிடைத்த வாய்ப்பை எனது வாழ்நாளின் கவுரவமாக கருதுகிறேன். எவ்வித கவலையும் இல்லாமல் நன்றியுணர்வோடு விடைபெற விரும்புகிறேன்’ என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து  பிரிட்டன் வெளியேற அந்த நாட்டு மக்கள் வாக்களித்தனர். பிரிட்டன் வெளியேற நான்கு  ஆண்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 29-ம் தேதியுடன் இந்த கால அவகாசம் முடிவுக்கு வந்தது. ஆனால் அதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவு மசோதாவை மூன்று முறை தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோற்கடித்துவிட்டனர். ஆளும் பழமைவாத  கட்சி உறுப்பினர்களே தெரசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில் முன்னர் சில அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். தற்போது 4 வது முறையாக வரைவு மசோதாவை தெரசா மே தாக்கல் செய்தார்.

இந்த முறை கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் கட்சி எம்பிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரசா மே கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ஜெர்மி கார்பின் அதனை ஏற்க மறுத்துவிட்டார். இந்த நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். பிரதமர் பதவி மற்றும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து தெரசா மே விலக வேண்டும் என்ற எதிர்ப்பு குரல் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், பழமைவாத (கனசர்வேட்டிவ்) கட்சி தலைவர் பதவியை ஜூன் மாதம் 7-ம் தேதி ராஜினாமா செய்வதாக தெரசா மே அறிவித்துள்ளார்.

Related Stories: