×

2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி விவரம் உள்ளே!

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பல்வேறு கட்சிகளை சேர்ந்த நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்திருப்பது கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். அந்த வகையில், தேர்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்களின் வெற்றி, தோல்விகள் விவரம் பின்வருமாறு...

பிரதமர் நரேந்திர மோடி: பிரதமர் நரேந்திர மோடி, எதிர்பார்த்தபடியே வாரணாசி தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவ், வெறும் 1,95,000 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி: காங்கிரஸ் தலைவர் ராகுல், காங்கிரஸ்-ன் பாரம்பரியமிக்க அமேதியில், கடந்த முறை தன்னிடம் தோற்ற, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தற்போது அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். எனினும், கேரளாவின் வயநாடு தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அமேதி தோல்வியை ஈடுசெய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா: முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தேசிய தலைவருமான தேவ கவுடா கர்நாடக மாநிலம் தும்கூர் தொகுதியில் தோல்வியை தழுவினார். தேவ கவுடாவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட ஹசன் மக்களவை தொகுதியை தனது பேரனுக்கு ஒதுக்கிய தேவ கவுடா இம்முறை தும்கூர் மக்களவை தொகுதியில் களமிறங்கினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பசவராஜ் 13,339 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பாஜக தலைவர் அமித் ஷா: பாஜக தலைவர் அமித் ஷா, குஜராத் மாநிலம், காந்தி நகர் தொகுதியில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சி.ஜே.சவ்தா, சுமார் 3 லட்சத்து 37,000 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

சரத் யாதவ்: மூத்த எம்பியான எல்ஜேடி தலைவர் சரத் யாதவ், மாதேபுரா தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளரிடம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

மெஹபூபா முப்தி: காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, அனந்த்நாக் தொகுதியில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

சாத்வி பிரக்யா சிங் தாகூர்: பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் போபால் தொகுதியில் போட்டியிட்ட மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், மத்திய முன்னாள் காங்கிரஸ் அமைச்சருமான திக்விஜய் சிங் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் களமிறங்கிய சாத்வி பிரயக்யா 3,64,822 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தன்வசப்படுத்தினார்.

மல்லிகார்ஜுன கார்கே: கர்நாடகாவில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

நடிகர் சுரேஷ் கோபி: பாஜக சார்பில் களம் கண்ட நடிகர் சுரேஷ் கோபி, கேரள மாநிலம், திருச்சூர் தொகுதியில் தோல்வி கண்டுள்ளார்.

கவிதா கல்வகுன்ட்லா: தெலுங்கானாவில் முதல்வரின் மகளும், எம்.பி.,யுமான கவிதா கல்வகுன்ட்லா, நிஜாமாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அரவிந்திடம் தோற்றார்.

அகிலேஷ் யாதவ்: சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில் அகிலேஷின் மனைவியும், எம்.பி,யுமான டிம்பிள் யாதவ், கன்னோஜ் தொகுதியில், தோல்வியடைந்தார்.

நடிகை ஜெயப்பிரதா: பாஜக சார்பில் ராம்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாலிவுட் நடிகையும், அத்தொகுதி முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதா சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கானிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆசம்கான் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கவுதம் கம்பீர்: கிழக்கு டெல்லியில் பாஜக தரப்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வெற்றி பெற்ற நிலையில், குத்துச்சண்டை வீரரும், காங்கிரஸ் வேட்பாளருமான விஜேந்தர் சிங், தெற்கு டெல்லி தொகுதியில் தோல்வியுற்றார்.

வருண் காந்தி: உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் போட்டியிட்ட வருண் காந்தி வெற்றி பெற்றார்.

நடிகர் பிரகாஷ் ராஜ்: பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய நடிகர் பிரகாஷ் ராஜ் 28,906 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையே பிடித்தார்.

நடிகர் சத்ருகன் சின்ஹா: அண்மையில் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா பீகார் மாநிலம் பாட்னா சாகேப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் தோல்வியை தழுவினார். சத்ருகனின் மனைவி பூனம் சின்ஹா, லக்னோவில் அமைச்சர் ராஜ் நாத் சிங்கிடம் தோல்வியடைந்தார்.

நடிகை ஊர்மிளா மட்டோன்கர்: மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட பாலிவுட் நடிகை ஊர்மிலா, சுமார் நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டியிடம் தோல்வியடைந்தார்.  

கண்ணையா குமார்: டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த கண்ணையா குமார், பீகார் மாநிலம் பெகுல்சாரி தொகுதியில் இரண்டாம் இடம்பிடித்து தோல்வியை தழுவினார்.

ஷீலா தீக்‍ஷித்: டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‍ஷித் வடகிழக்கு டெல்லி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

சன்னி தியோல்: தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்த சன்னி தியோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புர் தொகுதியைக் கைப்பற்றியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுனில் குமார் ஜக்காரை 82, 452 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

நடிகை ஹேமமாலினி: பாஜக சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் மீண்டும் போட்டியிட்ட நடிகை ஹேமாமாலினி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் பதாக்கை வென்றுள்ளார். 27,925 வாக்குகள் வித்தியாசத்தில் ஹேமமாலினி வெற்றி கண்டுள்ளார்.

Tags : victory ,contestants ,election ,Lok Sabha , Lok Sabha election, star candidates, success, failure
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...