தேர்தலில் முறைகேடு என குற்றச்சாட்டு: இந்தோனேசியாவில் வலுக்கும் போராட்டம்... 6 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியா தேர்தலில் முறைகேடு தொடர்பாக இருதரப்புக்கிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியா திகழ்ந்து வருகிறது. அந்நாட்டில் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் 3 தேர்தல்களும் கடந்த மாதம் 17-ந் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதில் 55.5 சதவீத ஓட்டுகளை பெற்று தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 விழுக்காடு வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் இந்த தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக பிரபோவோ சுபின்யான்டோ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். அதன் காரணமாக அவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும் என்றும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் ஜகார்த்தா உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். முதலில் அமைதியாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. அதனை தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டி விரட்டியடித்தனர். இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories: