×

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 2-வது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்த்தை இழக்கிறது காங்கிரஸ்

டெல்லி: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் தொடர்ந்து 2-வது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்த்தை இழந்துள்ளது. இதன் காரணமாக எதிர்கட்சித் தலைவர் இல்லாத வகையில், இந்த முறையும் பிரதமர் மோடி ஆட்சி அமைகிறது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு 90 இடங்களும், மற்றவைகளுக்கு 102 இடங்களும் கிடைத்துள்ளன.

காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் கட்சி மட்டும்  52 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மக்களவையில் எதிர்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தபட்சம் 55 தொகுதிகளிலாவது தனித்து வென்றிருக்க வேண்டும். ஆனால் 52 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதால் அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து பறிபோனது. இருப்பினும் ஆளுங்கட்சி விரும்பினால் காங்கிரசுக்கு எதிர்கட்சி அந்தஸ்தை வழங்கலாம் என கூறப்படுகிறது. கடந்த முறை மக்களவைத் தேர்தலின்போதும், காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.

தற்போது 2-வது முறையாக காங்கிரஸ் கட்சி அதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், எதிர்கட்சி தலைவர் இல்லாமல் 2-வது முறையாக மோடி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. நேரு, இந்திரா காந்திக்கு பிறகு தொடர்ச்சியாக 2-வது முறை தனிப் பெரும்பான்மையுடன் மோடி பிரதமராக உள்ளார். காங்கிரஸ் அல்லாத கட்சியைச் சேர்ந்தவர் தனிப்பெரும்பான்மையுடன் 2-வது முறையாக பிரதமராவது இதுவே முதன்முறை ஆகும்.


Tags : Congress ,Opposition , Congress, Opposition, Congress, BJP
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...