×

போராடி பெற்ற 7 இடங்களிலும் தோல்வி எதிரொலி மாநிலங்களவை எம்பியும் பாமகவுக்கு கிடைக்காது?: அதிமுக தலைவர்கள் திடீர் முடிவு

சென்னை: தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாமக 7 இடங்களில் தோல்வி அடைந்துள்ளது. எனவே, பாமகவுக்கு  உறுதி அளித்ததை ராஜ்யசபா சீட்டை அளிக்க  அதிமுக பரிசீலனை செய்து வருகிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு அதிமுக தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பாமகவுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட 7 இடங்கள், மாநிலங்களவைக்கு ஒரு தொகுதி என 8 சீட் ஒதுக்கப்பட்டது. அதேபோன்று பாஜகவுக்கு 5 சீட், தேமுதிகவுக்கு 4 சீட், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தமாகாவுக்கு தலா ஒரு சீட் வழங்கப்பட்டது.நேற்று நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். தேனி மற்றும் சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட இரண்டு பேர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர்.நடந்து முடிந்த தேர்தல் முடிவு அதிமுக தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து நடந்த முதல் மக்களவை தேர்தல் என்பதால், மெகா கூட்டணி அமைத்து வெற்றிபெற வேண்டும் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த கூட்டணி உருவானது. ஆனால் இவர்களின் எதிர்பார்ப்பு தற்போது தோல்வியில் முடிந்துள்ளது. கூட்டணி கட்சிகளால் அதிமுகவுக்கு எந்த லாபமும் இல்லாமல் போய் விட்டது. பாமக ஆதரவுள்ள சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடி கணக்கு போட்டார். தற்போது, அந்த தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செல்வாக்குள்ள மதுரை, தேனி மாவட்டங்களில்தான் அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு கிடைத்துள்ளது.இதுகுறித்து அதிமுக தலைமை கழக நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தமிழகத்தில் ஜெயலலிதா யாருடனும் கூட்டணி அமைக்காமல் கடந்த மக்களவை தேர்தலில் 37 இடங்களில் அதிமுகவை வெற்றிபெற வைத்தார். அதேபோன்றுதான் இந்த தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட வேண்டும் என்று அதிகமான தொண்டர்களும், 2ம் கட்ட தலைவர்களும் கூறினர். ஆனால், ஜெயலலிதா மறைவால் அதிமுக வாக்கு வங்கி குறைந்திருக்கலாம் என்ற கணக்கில்தான் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். ஆனால் கூட்டணி கட்சிகளால் அதிமுகவுக்கு எந்த லாபமும் இல்லாமல் போய்விட்டது.

இதனால் அதிமுக சார்பில் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததை, கட்சியின் தலைமை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது. காரணம், ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோதுகூட இதேபோன்று பாமகவை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொண்டார். அப்போது, ஒரு மாநிலங்களவை தொகுதி எம்பி தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அப்போது நடந்த பொதுத்தேர்தலில் ஒரு சீட்டில்கூட பாமக வெற்றிபெறவில்லை. அதிமுக வேட்பாளர்களுக்கு பாமகவால் எந்த லாபமும் கிடைக்கவில்லை என்று கூறி பாமகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க மறுத்துவிட்டார். அதே காரணத்தை காட்டி இந்தமுறையும் பாமகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வாய்ப்பில்லை. தற்போதுள்ள தலைவர்களும் இதே முடிவைத்தான் எடுப்பார்கள்” என்றார். அதேபோன்று, தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதியிலும் மீண்டும் அதிமுக கூட்டணியில் போட்டியிட ஏ.சி.சண்முகத்துக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.அனைத்து தொகுதியிலும் தோற்றதால் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் வழங்குவது குறித்து கட்சியின் தலைமை மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது.


Tags : places ,Mamata Banerjee , Echoing , Rajya Sabha MP, marauding, AIADMK leaders
× RELATED ராமேஸ்வரத்தில் 25 இடங்களில் குடிநீர் தொட்டி: பொதுமக்கள் மகிழ்ச்சி