×

5ல் ஒன்று கூட ஜெயிக்கவில்லை தமிழகத்தில் காணாமல் போன பாஜ: தமிழிசை பதவியை பறிக்க தலைமை முடிவு

சென்னை: தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ ஒன்றில் கூட வரவில்லை. இதனால், தமிழக பாஜ தலைவராக உள்ள தமிழிசையின் பதவியை பறிக்க அக்கட்சி தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் பாஜ தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர். தமிழகத்தில் எப்படியாவது வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜ தலைமை 5 வேட்பாளர்களுக்கும் கடும் நெருக்கடியை கொடுத்து வந்தது. இதனால் மிகவும் பிரபலமானவர்களையே வேட்பாளர்களாகவும் நிறுத்தியது. கட்சி தலைமையின் கடும் நெருக்கடியை தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களுடைய தொகுதிகளில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தை மேற்கொண்டனர். வேட்பாளர்கள் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் ‘தாமரை மலர்ந்தே தீரும்’ என்ற வாசகத்தையே முன்மொழிந்து வந்தனர். குறிப்பாக, பிரதமர் மோடியும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்தும் தமிழகத்தில் பிரசாரத்தை மேற்கொண்டார்.

இந்நிலையில், தேசிய அளவில் பாஜ பெரும் வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற போதிலும் தமிழகத்தை பொறுத்தவரை பாஜ ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. இது பாஜ தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா ஆகியோர் வெற்றிபெறுவார்கள் என அக்கட்சி கணித்திருந்தது. 5ல் கண்டிப்பாக 3 இடங்களில் வந்தே தீருவோம் எனவும் தமிழக பாஜ தலைவர் தமிழிசை கட்சி தலைமையிடம் உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை வெளியாகிய தேர்தல் முடிவுகள் பாஜ தலைவர்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது. இது பாஜ தலைவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக பாஜ தலைவர் தமிழிசையை டெல்லிக்கு அக்கட்சி தலைமை அவசரமாக அழைத்துள்ளது. தோல்வி குறித்து தமிழிசையிடம் விளக்கம் கேட்கவும் உள்ளனர். இதேபோல், தமிழக பாஜ தலைவர் பதவியில் இருந்து தமிழிசை சவுந்தரராஜனை விடுவிக்கவும் தலைமை முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக பாஜ வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : disappearance ,BJP ,chief minister ,Tamil Nadu , Not one ,five, won, Disappeared ,Tamil Nadu
× RELATED பாஜவில் இருந்து ஈஸ்வரப்பா திடீர் நீக்கம்